Published:Updated:

`தீவிரவாதியை ட்ரேஸ் செய்த போலீஸ்... சிக்கிய டி.எஸ்.பி!' - காஷ்மீர் காவல்துறை அதிர்ச்சி

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் காரில் பயணித்த போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Representation Image
Representation Image

ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இருவருடன் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தைக் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு காஷ்மீர், லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராகத் தீவிரவாதிகள் ஜம்முவில் தொடர் தாக்குதல் ஈடுபட்டு வருவதாக போலீஸார் கூறுகின்றனர். ஜம்முவில் உள்ள ஆப்பிள் தோட்டத்துக்கு பணிக்குச் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீது குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் இந்தத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த சையத் நவீது பாபாவுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகத்தினர். இதனையடுத்து காஷ்மீர் பகுதியில் நவீதுபாபாவின் நடமாட்டத்தை போலீஸார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். 2017-ம் ஆண்டு சையத் நவீது தீவிரவாதிகள் அமைப்பில் இணைந்துள்ளார். தேடப்பட்டு வரும் குற்றவாளியான சையத் நவீது ஒரு முன்னாள் காவலர். காஷ்மீரில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார். 2017-ம் ஆண்டு இரண்டு ஏ.கே.47 துப்பாகியுடன் மாயமான சையத் அதன்பின்னர் ஹிஸ்புல் முஜாகீதீன் அமைப்பில் இணைந்துள்ளார்.

`இனி காஷ்மீர் வருமானமே வேண்டாம்!'- தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளிகளின் குடும்பம்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சையத்துக்கும் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐஇடி வெடிகுண்டுகளில் நிபுணத்துவம் பெற்ற சையத் காஷ்மீர் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சையத் நவீத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நவீது ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை போலீஸார் உறுதி செய்தனர். நேற்று மாலை 4 மணியளவில் நவீது சென்ற வாகனத்தை செக்போஸ்டில் தடுத்து நிறுத்தினர்.

காஷ்மீர்
காஷ்மீர்

காரில் இருந்த நவீத் மற்றும் அவரின் கூட்டாளி ஆசிப் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் போலீஸ் அதிகாரியான தாவீந்தர் சிங் கைதானார். நவீத் பயணித்த காரில் தாவீந்தர் சிங்கும் உடன் இருந்துள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாவீந்தர் சிங் டி.எஸ்.பி ரேங்க் அதிகாரியாவார். இவர் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார்.

தாவீந்தர் கைதானதையடுத்து அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து ஏ.கே. 47 மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தாவீந்தர் அளித்த தகவலின் பேரில் தெற்கு காஷ்மீர் பகுதியில் பல இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை போலீஸார் மீட்டுள்ளனர். அவர்கள் பயணித்த காரில் இருந்தும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காஷ்மீர்
காஷ்மீர்

தாவீந்தர் சிங் கடந்தாண்டு சுதந்திர தினவிழாவின்போது வீர தீரத்துக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றிருந்தார். இந்தப் பதக்கத்துடனே தற்போது அவர் கைதாகியுள்ளார். காவல் அதிகாரி ஒருவரின் உதவியுடன் தீவிரவாதிகள் இருவர் டெல்லியை நோக்கி பயணமானது குறித்து விசாரித்து வருகின்றனர். தாவீந்தர் நேற்று பணிக்குச் செல்லவில்லை நான்கு நாள்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளுடன் போலீஸார் அதிகாரி ஒருவர் கைதானது ஜம்முவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.