Published:Updated:

சாமான்யர்களின் 7 அடிப்படைத் தேவைகள்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

தற்போதைய சூழ்நிலையில் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது அரசின் அடிப்படைக் கடமையாகும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு கடினமான பொருளாதாரச் சிக்கலில் இன்று உலகமே சிக்கித் தவிக்கிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய வழக்கமான அன்றாட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறான். உலக நாடுகளின் பொருளாதாரங்கள் அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

ஆயினும், இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் பொருளாதார நிலைப்புத்தன்மை என்பதைவிட, தனி மனிதனுக்கான உணவு என்பது மிக முக்கியமான தேவையாக அமைந்துள்ளது. நோயின் இறப்பை பசியின் இறப்பு வென்றுவிடுமோ எனும் பயம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Representational Image
Representational Image

இந்தக் கடினமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுடன், சாமான்ய மக்களின் நலன் காக்க அரசு மேலும் சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சாமான்ய மக்களின் விருப்பமாக உள்ளது.

இந்த 7 கோரிக்கைகளும் இந்தியாவில் வசிக்கும் சாமான்யர் ஒவ்வொருவரின் அத்தியாவசியத் தேவைகளாகும்.

1. ஜி.எஸ்.டி வரி:

இன்றைய கடினமான கொரோனா லாக் டௌவுன் சூழ்நிலையிலும் மக்கள் எந்த ஒரு உணவு, மருந்து அல்லது அத்தியாவசியப் பொருள்களை வாங்கினாலும் ஜிஎஸ்டி செலுத்திய பிறகே வாங்க வேண்டும் எனும் நிலை காணப்படுகிறது.

இதை ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியைக் கழித்துவிட்டு பொருள்களின் விலையைக் குறைத்து விற்க வணிகர்களுக்கு மத்திய அரசு உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி நீங்கலாகப் பொருள்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாயின் அனைத்துப் பொருள்களின் விலையும் கணிசமாகக் குறைய வாய்ப்புண்டு. சாமான்ய மக்களுக்கு இது நேரடி பயனுள்ளதாக அமையும்.

2. இ.எம்.ஐ தள்ளிவைப்பு:

வங்கிகளில் அனைத்து விதக் கடன் பெற்றவர்களும் மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதப் பின்பற்றி அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் மூன்று மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தத் தேவையில்லை என அறிவித்துள்ளன.

ஆனால், இது இ.எம்.ஐ-யின் தள்ளுபடி இல்லை. தள்ளிவைக்கப்பட்டுள்ளது, அவ்வளவே. இந்த மூன்று மாதங்களுக்கான வட்டி தொடர்ந்து கணக்கிடப்படுகிறது. எஸ்.பி.ஐ வங்கியின் கணக்கீட்டின்படி மூன்று மாதங்கள் தவணை தள்ளிவைப்புக்கு கிட்டத்தட்ட 11 மாதங்கள் இ.எம்.ஐ தவணையை வாடிக்கையாளர் திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. அனைத்து வங்கிகளின் நிலையும் இவ்வாறுதான் அமைந்துள்ளது.

Representational Image
Representational Image

எனவே, பெரும்பாலான கடன்தாரர்கள் இச்சுமையைத் தவிர்க்க வேண்டி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தவணைத்தொகையை கடந்த மாதம் செலுத்தியுள்ளனர்.

எனவே, ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கான வட்டியை முழுக்கத் தள்ளுபடி செய்துவிட்டு மார்ச் 1-ல் இருந்த அதே நிலை (Outstanding Interest Amount) ஜூன் 1-ல் இருக்குமாறு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். 3 மாதங்களுக்கு வட்டி தள்ளுபடி கிடைத்தால் மட்டுமே இந்த இ.எம்.ஐ தவணை தள்ளிவைப்பு வெறும் அறிவிப்பாய் மாறிவிடாமல் உண்மையில் மக்களுக்குப் பயனுடையதாகவும் அமையும்.

3. சுங்கக் கட்டணம்:

சிறு இடைவெளிக்குப் பின் டோல்கேட்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன. திறக்கப்பட்டது மட்டுமல்லாமல் வசூலிக்க கூடிய சுங்கக் கட்டணங்களின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்து மட்டுமே நடந்துகொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், சுங்கக்கட்டண அதிகரிப்பு என்பது அத்தியாவசியப் பொருள்களின் விலையில் பாதகமான விளைவை உண்டாக்கி, மக்களின் தலையில் நேரிடையாகச் சுமையை அதிகரிக்கச் செய்யும். பொருள்களின் விலை உடனடியாக அதிகரிக்கும்.

Representational Image
Representational Image

எனவே, மத்திய அரசு அனைத்து விதமான வாகனங்களுக்கும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.

அவ்வாறு சுங்கக் கட்டண விலக்கு கிடைக்கும்போது பொருள்களின் விலை கணிசமான அளவு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். சாமான்ய மக்களுக்கு நேரிடையான பயன் ஏற்படும்.

4. மதுவிலக்கு:

எந்த ஒரு செயலையும் ஒரு மனிதன் 21 நாள்கள் தொடர்ந்து செய்தால் அது ஒருவரது பழக்கமாக (Habit) மாறும்.

அதை அவர் 90 நாள்கள் தொடர்ந்தால் அது ஒருவரது மாற்ற முடியாத வழக்கமாக (Custom) மாறிவிடும் என்கிறது 21/90 எனும் உளவியல் விதி.

தற்போது லாக் டௌன் காரணமாக குடிமகன்கள் யாரும் குடிப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, குடிக்காமல் இருப்பது குடிமகன்களின் ஒரு பழக்கமாக மாறியிருக்கும். லாக் டௌன் முடிந்த பிறகு, குறைந்தபட்சம் 90 நாள்களுக்காவது அரசு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தற்போது குடிக்காமல் இருக்கும் பழக்கம் 90 நாள்கள் மதுவிலக்கால் வழக்கமாக மாற வாய்ப்புண்டு. இதனால் குடிமகன்களின் பெரும்பாலானோர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.

நிரந்தர குடிநோயாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட, ஆனால் விடுபட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் குறிப்பிட்ட அளவிலான குடிமகன்களுக்கு இந்த 90 நாள்கள் மதுவிலக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்திற்கும் இது பயனளிக்கக்கூடிய ஒன்றாகவே அமையும்.

Representational Image
Representational Image

5. உளவியல் நம்பிக்கை:

அலோபதி மருந்துகள் கண்டறியப்படாத டெங்கு காய்ச்சலை நிலவேம்பு கஷாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு கொண்டு வெற்றி கொண்டவர்கள் நாம். இத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நம்முடைய பழம்பெரும் மருத்துவ முறைகளில் பொருத்தமான ஒரு மருந்தை, அரசு உரிய முறையில் சோதனை செய்து அதை மக்களுக்கு உடனே அறிவிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வேண்டுகோளாக உள்ளது.

இந்தியாவின், தமிழரின் பாரம்பர்ய மருத்துவமுறையில் இந்நோய்க்கும் அவசியம் மருத்து இருக்கும். அதை நாம்தான் இன்னும் கண்டுபிடிக்காமல் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

கபசுர குடிநீர் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்தன. ஆனால், அது சரியான மருந்துதானா என்பதை அரசு முறைப்படி அறிவிக்க வேண்டும். மேலும், இத்தகைய மருந்துகள் தடுப்பு மருந்துகளா?அல்லது குணமாக்கும் மருந்துகளா? என்ற தெளிவை உண்டாக்க வேண்டியதும் அரசின் கடமையாகிறது.

"நோயைவிட நோயைப் பற்றிய பயமே மனிதர்களைக் கொள்ளும்" என்பார்கள்.

இது இன்று உண்மையாகிக்கொண்டுள்ளது. எனவே, நோயைப் பற்றிய மக்களின் பயத்தை ஓரளவுக்காவது நீக்க வேண்டுமெனில் அவர்களை உளவியல் ரீதியில் பலப்படுத்துவது அவசியம். எனவே, ஏதேனும் முறையான ஒரு பாரம்பர்ய மருத்துவ முறையையோ, மருந்தையோ குறித்து மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகின்றது. மனரீதியாகச் சோர்ந்து போயிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உளவியல் ரீதியில் இவ்வாறான நம்பிக்கையூட்டுவது அரசின் கடமை.

Representational Image
Representational Image

6. கலால் வரி:

உலகத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கக்கூடிய, கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ள இன்றைய சூழலில் வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெயின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

இந்த சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் டீசல் மீதான கலால் வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

மேலும், சர்வதேச சந்தையின் விலை குறைவிற்கு ஏற்ப டீசலின் விலையைக் குறைக்க வேண்டும். இவ்வாறு இருமுறைகளில் சலுகை அளிக்கும்போது டீசலின் விலை பெருமளவு குறையும்.

டீசல் விலை குறைகையில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்துச் செலவும் கணிசமாகக் குறையும். அதனால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை தானாகவே குறைய வாய்ப்புண்டு.

எனவே, மத்திய அரசு குறைந்தபட்சம் சில மாதங்களுக்காவது டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

7. ஹெலிகாப்டர் மணி:

`ஹெலிகாப்டர் மணி' என்பது ஹெலிகாப்டரிலிருந்து பணம் தூவப்படுவதில்லை. இது ஒரு பொருளாதார உத்தி ஆகும்!

நாட்டின் பொருளாதாரம் குறித்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும், மோசமான பொருளாதாரச் சூழலில் இருந்து நாட்டை மீட்டுக் கொண்டுவரவும் `ஹெலிகாப்டர் மணி' எனும் ஒரு உத்தி பொருளாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Representational Image
Representational Image

நமது நாட்டைப் பொறுத்தவரையில் ரிசர்வ் வங்கி பணத்தை அச்சடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

குறிப்பிட்ட அளவிலான தங்கம், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பத்திரங்களின் அடிப்படையில் மட்டுமே பணம் அச்சிடப்படுகிறது.

ஆனால், ஹெலிகாப்டர் மணி எனும் உத்தியைக் கையாளும்போது எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி குறிப்பிட்ட அளவு தேவையான பணம் அச்சடிக்கப்பட்டு மக்களின் கணக்குகளுக்கு நேரடியாக ரிசர்வ் வங்கியால் செலுத்தப்படும். இவற்றை மக்கள் திரும்ப செலுத்த வேண்டியதில்லை. மேலும், மிகமிகக் குறைந்த வட்டிக்கு தொழில் முனைவோருக்கு கடன்கள் அளிப்பதும் ஹெலிகாப்டர் மணி உத்தியே.

ஒருவரின் செலவுதான் மற்றவரது வருமானமாக மாறுகிறது. எனவே, மக்கள் தாங்கள் பெற்ற பணத்தைத் தங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கு செலவழிக்கும்போது பல்வேறு துறைகள் புத்துணர்வு அடையும். நாட்டின் பொருளாதாரம் வலிமை பெறும். மக்களின் தன்னம்பிக்கையும் கூடும். எனவே, `ஹெலிகாப்டர் மணி' உத்தியை அரசு உடனே பின்பற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அவ்வாறே குடிமக்கள் இருந்தால்தான் அரசு செயல்பட முடியும்.

நாட்டின் பொருளாதாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றுதான். ஆனால் அதைவிட முக்கியமானது மனித உயிர்கள். எனவே, தற்போதைய சூழ்நிலையில் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது அரசின் அடிப்படைக் கடமையாகும்.

இத்தகைய அரசின் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சீரழிவுகளை நாடு நோயிலிருந்து முழுதும் மீண்ட பிறகு, மிக விரைவிலேயே நம்மால் மீட்டெடுத்துக் கொள்ள முடியும். அதற்கான மனித வளமும் வலிமையும், திறமையும் நம்மிடம் உள்ளன.

எனவே, இதுபோன்ற பல்வேறு மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகள் மூலமாகக் கைகளைக் கழுவ மட்டுமன்றி, சாமான்யர்கள் வயிற்றைக் கழுவவும் அரசு வழிகாட்டும் என நம்புவோம்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு