Published:Updated:

27 நாள்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு தளர்வு! -நிபந்தனைகளுடன் கேரள அரசு முடிவு

கேரள எல்லையில் சாலையில் சோதனை
கேரள எல்லையில் சாலையில் சோதனை

கொரோனா வைரஸ் பாதிப்பு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மாவட்டங்களில் நிபந்தனையுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. பிற மாவட்டங்களில், நிலைமை சீரடைவதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதையும் பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்டுவருவதால், இதுவரை 270 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 129 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்கள். கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இதுவரை 27 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அதைத் தளர்த்த கேரள அரசு முடிவுசெய்துள்ளது.

பாதுகாப்பான கிரீஸ் ஜோன் பகுதியில் இருக்கும் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களும் ஆரஞ்ச்-பி பிரிவில் இருக்கும் ஆலப்புழா, திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஓசி சைக்கிள்.. இரவில் பயணம்! -கேரளா டு கொல்கத்தா பயணமான கட்டுமானத் தொழிலாளி

ஆரஞ்ச்-ஏ பிரிவில் இருக்கும் கொல்லம், பத்தனாம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில், வரும் 24-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட இருக்கிறது. ரெட் ஜோன் எனப்படும் பயப்படக்கூடிய நிலையில் உள்ள மலப்புரம், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 88 இடங்கள் ஹாட்ஸ்பாட் எனக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கும் கட்டுப்பாடுகள் நீடிக்கும். ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதிலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்கச் சம்பவங்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 20 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  

வாகனங்களுக்கு கட்டுப்பாடு
வாகனங்களுக்கு கட்டுப்பாடு

கிரீன் மற்றும் ஆரஞ்ச்-பி மண்டலத்தில் இருக்கும் நீதிமன்றங்கள் நாளை (21-ம் தேதி) முதல் செயல்படத் தொடங்கும். இருப்பினும், 33 சதவிகித நீதிமன்றப் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருவார்கள் என்பதால், பெரும்பாலான வழக்குகள் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்தப்படும். ஆரஞ்ச்-ஏ மண்டலங்களில் உள்ள நீதிமன்றங்கள் 24-ம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். தனியார் வாகனங்களைப் பொறுத்தவரை ஒற்றப்படை வரிசை எண்களைக் கொண்ட வாகனங்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கிக் கொள்ளலாம்.  

தனியார் வாகங்களுக்கு கட்டுப்பாடு
தனியார் வாகங்களுக்கு கட்டுப்பாடு

இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்களை செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கலாம். பெண் ஓட்டுநர்கள் எல்லா நாள்களிலும் வாகனங்களை இயக்கலாம். ஞாயிற்றுக் கிழமைகளில், அத்தியாவசியப் பொருள்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும்.

இரு சக்கர வாகனங்களில் குடும்பத்தினர் தவிர யாரையும் பின்னால் அமரவைத்து அழைத்துச்செல்லக் கூடாது என்றும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு