Published:Updated:

நாக்பூர்: 'ரெட் லைட்' பகுதிக்கு 'சீல்' வைத்த போலீஸார்; போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள்

நாக்பூரில் ரெட் லைட் பகுதிக்கு போலீஸார் சீல் வைத்ததால் பாலியல் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கங்கா - ஜமுனா பகுதியில் பாலியல் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்களை அங்கிருந்து அனுப்பவேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர். இதனால் போலீஸார் இந்தப் பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென சீல் வைத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கங்கா - ஜமுனா பகுதிக்குச் செல்லும் 12 சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதோடு இப்பகுதியில் 24 மணி நேரமும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புனே: இரவு நேர பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த 2,000 பாலியல் தொழிலாளர்கள்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலியல் தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலியல் தொழிலாளர்கள்

இதனால் பாலியல் தொழிலாளர்கள் சிலர் அங்கிருந்து வேலை தேடி வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். எஞ்சிய பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீஸார் தங்களது பகுதிக்கு சீல் வைத்ததைக் கண்டித்து பாலியல் தொழிலாளர்கள், தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் ஜிவாலா தலைமையில் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம், மற்றொரு தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர் அபா பாண்டே போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆதரவாக தனது ஆதரவாளர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனே போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் ஜிவாலா கூறுகையில், 'பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு சில பில்டர்கள் குறி வைத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் இங்கிருந்து அனுப்பிவிட்டு அந்த இடத்தை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் போலீஸார் இந்த இடத்திற்கு சீல் வைத்துள்ளனர்' என்று குற்றம் சாட்டினார். ஆனால் இதுகுறித்து கவுன்சிலர் அபா பாண்டே கூறுகையில், 'பாலியல் தொழிலாளர்களால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவேண்டும். மைனர் பெண்கள் கூட பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்' என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு