Published:Updated:

ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிப்பு! - காத்திருந்து அழைத்துச் சென்ற ஷாருக் கான், கௌரி கான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்யன் கான் சிறையிலிருந்து விடுதலை
ஆர்யன் கான் சிறையிலிருந்து விடுதலை

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் இம்மாதத் தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக் கானின் மூத்த மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் கிடைத்தும் உடனே விடுதலையாக முடியவில்லை. ஜாமீன் உத்தரவு நகல் வெள்ளிக்கிழமைதான் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஜாமீன் நகல் ஷாருக் கான் தரப்பு வழக்கறிஞர்களிடம் கிடைத்தது. அதை எடுத்துச் சென்று சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்து விடுதலை உத்தரவை வாங்கிச் சென்று ஆர்யன்கான் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர் ரோடு சிறையில் மாலை 5:30 மணிக்குள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சட்ட நடைமுறைகள் முடிந்து ஜாமீன் உத்தரவு விடுதலை நகல், உத்தரவாத ஆவணங்களைச் சிறையில் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் வெள்ளிக்கிழமை ஆர்யனால் சிறையிலிருந்து வெளியில் வர முடியவில்லை. வெள்ளிக்கிழமையே ஆர்யன் சிறையிலிருந்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கையில் ஆர்தர் ரோடு சிறை வாசல் மற்றும் ஷாருக் கானின் மன்னத் இல்லத்துக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

ஷாருக் கான் இல்லத்துக்கு முன்பு ரசிகர்கள்
ஷாருக் கான் இல்லத்துக்கு முன்பு ரசிகர்கள்

கூட்டத்தைக் கட்டுப்படுத்த இரண்டு இடங்களிலும் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். வழக்கமாக ஆர்தர் ரோடு சிறை வாயிலில் ஜாமீன் ஆவணங்களைப் போடுவதற்காக ஒரு பாக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாக்ஸ் தினமும் நான்கு முறை திறக்கப்படும். ஒவ்வொரு நாளும் மாலை 5:30 மணிக்கு இறுதியாகத் திறக்கப்படும். 5:30 மணிக்குக் கிடைக்கும் ஜாமீன் ஆவணங்களை ஆய்வு செய்து சிறை நிர்வாகம் மாலை 7:30 மணிக்கு கைதிகளை விடுதலை செய்யும். ஆர்யன் தரப்பு வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்குப் பிறகுதான் ஜாமீன் தொடர்பான விடுதலை ஆவணங்களை பெட்டியில் போட்டனர். காலை 5:30 மணிக்கு பெட்டியை திறந்த அதிகாரிகள் அவற்றை எடுத்து ஆர்யனை விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்திருப்பதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்யன் விடுதலைக்காக ஷாருக் கானின் நீண்டகாலத் தோழி நடிகை ஜுஹி சாவ்லா ஒரு லட்சத்துக்கான உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். நடிகர் ஷாருக் கானும், அவரின் மனைவி கெளரி கானும் தங்கள் மகனை சிறையிலிருந்து அழைத்து வர வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர்.

சிறைக்கு வெளியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்
சிறைக்கு வெளியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

சிறையிலிருந்து சிறிது தூரத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஷாருக் கான் தன் மனைவியுடன் காரில் மகனின் வரவுக்காகக் காத்திருந்தார். ஷாருக் கானின் பாதுகாவலர்கள் சிறை வாசலில் ஆர்யனுக்காகக் காத்திருந்தனர். ஆர்யன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன், பாதுகாப்பாக ஆர்யனை ஷாருக் கானின் காருக்கு அழைத்துச் சென்றனர். கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். ஆர்யன் ஜாமீனில் வெளிவருவதையொட்டி மன்னத் பங்களாவில் வெள்ளிக்கிழமை தீபாவளிக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியவிடப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு