Published:Updated:

`ஒரு தைரியத்தில் அவருக்கே கடிதம் எழுதிவிட்டேன்!’- 27 வயதில் ரத்தன் டாடாவின் உதவியாளரான இளைஞரின் கதை

ரத்தன் டாடா- சாந்தனு
ரத்தன் டாடா- சாந்தனு ( FB/@humansofbombay )

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் கனவு போலவே ரத்தன் டாடா நிறுவனத்தில் இணைந்து அவருக்கு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான ரத்தன் டாடாவிடம் அல்லது அவருக்குக் கீழ் வேலை செய்யவேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவாக இருக்கும். அதே கனவுடன் சுற்றித்திருந்த 27 வயது மும்பை இளைஞரின் கனவு நிஜமாகியுள்ளது. நேரடியாக டாடாவே போன் செய்து தன் உதவியாளராக அந்த இளைஞரை நியமித்துள்ளார்.

சாந்தனு நாயுடு
சாந்தனு நாயுடு
FB/@humansofbombay

சாந்தனு நாயுடு என்ற அந்த மும்பை இளைஞரின் வெற்றிப் பயணம் பற்றிய கதை பிரபலமான ‘ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் சாந்தனு முதல்முறையாக ரத்தன் டாடாவைச் சந்தித்தது முதல் அவருக்கு வேலை கிடைத்து வரை அனைத்து நிகழ்வுகள் பற்றியும் அவரே பகிர்ந்துள்ளார்.

``நான் 2014-ம் ஆண்டு என் பட்டப்படிப்பை முடித்துவிட்டு டாடா குரூப்ஸில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நேரத்தில் என் வாழ்க்கை மிகவும் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது. ஒரு நாள் மாலை, நான் வேலையை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும்போது வாகனத்தில் அடிபட்டு நாய் ஒன்று இறந்துகிடந்ததைப் பார்த்தேன். அந்த மாலைப் பொழுதுதான் என் வாழ்க்கையை மாற்றியது. எனக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அன்று சாலையில் அந்த நாயைக் கண்டதும் என் மனது துடிதுடித்தது. பின்னர் அதைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினேன். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது, இதே போன்று தினமும் எத்தனை நாய்கள் வண்டிகளில் அடிபடுகிறது, அவற்றை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என நினைத்து, என் நண்பர்களுடன் இணைந்து ஒளி எதிரொலிப்பு பெல்ட் ஒன்றைக் கண்டுபிடித்தோம்.

சாந்தனு நாயுடு
சாந்தனு நாயுடு
FB/@humansofbombay

முதலில் நாங்களே அதைச் சில தெரு நாய்களுக்கு மாட்டி விட்டோம் அதனால் நல்ல பலன் கிடைத்தது. நாங்கள் கண்டுபிடித்த பெல்ட் விஷயம் காற்றில் பறந்து டாடா குழுமம் வரை சென்றது. பின்னர் நிறைய பேர் தானாக எங்களிடம் வந்து பெல்ட் வேண்டும் எனக் கேட்டனர். அந்த நேரத்தில் அவர்களின் ஆர்டர்களை எடுத்துக்கொள்ள எங்களிடம் போதுமான பணம் இல்லை. அதனால் டாடா குழுமத் தலைவரிடம் உதவி கேட்டு ஒரு கடிதம் எழுதுமாறு என் தந்தை கூறினார். முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது, பின்னர் தைரியமாக கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன்.

Vikatan

கடிதம் எழுதிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரத்தன் டாடாவின் கையொப்பத்துடன் அவர் கைப்பட எழுதிய பதில் கடிதம் எனக்குக் கிடைத்தது. அதில் என் கண்டுபிடிப்பைப் பார்த்து அவர் வியந்ததாகவும் என்னை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். டாடா எனக்கு பதில் அனுப்பியதை என்னால் நம்பவே முடியவில்லை, அவரின் அழைப்பை ஏற்றும் நானும் சென்றேன், என்னைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்ட அவர், நாய்களின் பெல்ட்டை பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார்.

“I graduated in 2014 and started working at Tata group. Life was going pretty smooth, until one evening, while on my way...

Posted by Humans of Bombay on Wednesday, November 20, 2019

என் செயலை தற்போது நினைத்தாலும் புல்லரிப்பதாகக் கூறினார். பின்னர் அலுவலகத்திலிருந்து அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, அவர் வளர்க்கும் நாய்களை எனக்குக் காட்டினார். அவற்றின் கழுத்தில் நான் கண்டுபிடித்த பெல்ட் இருந்தது. அதைக் கண்டதும் நான் ஒரு நிமிடம் திகைத்தேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமானது. பின்னர் அவர் எங்களின் கண்டுபிடிப்புக்கு வணிக ரீதியில் உதவினார்.

அவரைச் சந்தித்த பிறகு என் பட்ட மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டேன். ஆனால், அவரிடம் நான் ஒன்று கூறினேன், `என் படிப்பு முடிந்த பிறகு டாடா நிறுவனத்துக்காக என் வாழ்வை அர்ப்பணிப்பேன்’ என்றேன். அவரும் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். படிப்பை முடித்து இந்தியா வந்த பிறகு ரத்தன் டாடாவே எனக்கு நேரடியாக போன் செய்து பேசினார். அப்போது, ‘எனக்கு நிறைய வேலைகள் உள்ளன, நீ என் உதவியாளராக இருக்க முடியுமா?’ எனக் கேட்டார். அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை சில விநாடிகள் மௌனத்துக்குப் பிறகு `சரி’ என்றேன்.

ரத்தன் டாடா - சாந்தனு நாயுடு
ரத்தன் டாடா - சாந்தனு நாயுடு
FB/@humansofbombay

நான் அவரிடம் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்து தற்போது 18 மாதங்கள் ஆகின்றன. அவர் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். சில சமயங்களில் என் கனவு நிஜமாகியது உண்மையா எனப் பலமுறை நானே என்னைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொள்வேன். எனது வயதினர் சரியான நண்பர், வழிகாட்டி, பாஸ் வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு அந்த மூவரும் ஒருவராக ரத்தன் டாடா கிடைத்துள்ளார். என் அதிர்ஷ்டத்தை என்னாலே நம்பமுடியவில்லை” என நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார் சாந்தனு.

News & Image Credits : Humans of Bombay

அடுத்த கட்டுரைக்கு