Published:Updated:

'அயோத்தி பிரச்னையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்.மோகன் பகவத் தலையிட வேண்டும்': சிவசேனா கோரிக்கை!

பிரதமர் மோடி, மோகன் பகவத்
பிரதமர் மோடி, மோகன் பகவத்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் தலையிட வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சமீபத்தில் நிலம் வாங்கப்பட்டது. வெறும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ரூ.18 கோடி கொடுத்து கோயில் அறக்கட்டளை வாங்கியதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங் குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டை சுமத்தியவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. சிவசேனாவும் இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடியும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடி, மோகன் பகவத்
பிரதமர் மோடி, மோகன் பகவத்

இது தொடர்பாக சிவசேனா தனது கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் செயலாகும். அதனை யாராவது திட்டமிட்டு களங்கப்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பலரின் தியாகம், போராட்டத்தின் மூலம் கோயில் கட்டப்படுகிறது. அதற்கு யாராவது களங்கம் ஏற்படுத்த முயன்றால் அதில் பிரதமர் நரேந்திரமோடியும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் தலையிடுவது தவிர்க்க முடியாதது.அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் விருப்பமாகும். இந்துக்கள் இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.

அயோத்தி நிலத்துக்காக சாதுக்கள், சன்னியாசிகள் தங்களது ரத்தத்தை சிந்தியுள்ளனர். சராயு ஆறு இந்துக்களின் ரத்ததால் சிவப்பாக மாறியுள்ளது. கோயிலுக்கு ரூ.2 கோடி நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார். எனவே இதில் பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் தலையிடவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பே இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் நிலமோசடி தொடர்பாக கோயில் அறக்கட்டளை தெளிவுபடுத்தவேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து கருத்து தெரிவித்திருந்த பாஜக, ராமர் கோயில் கட்ட சிவசேனா கொடுத்த ஒரு கோடி ரூபாயை திரும்ப கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் மும்பை செய்தி தொடர்பாளர் இது குறித்து அளித்திருந்த பேட்டியில், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் ஸூம் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதை தொழிலாக்கிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு