Published:Updated:

இந்தியாவின் முதல் ரஃபேல் பெண் விமானி... கோல்டன் ஏரோஸ் படையில் இணைந்த சிவாங்கி சிங்!

சிவாங்கி
சிவாங்கி ( twitter )

வாரணாசியைச் சேர்ந்த சிவாங்கி சிங் என்ற பெண் இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமான ஓட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து முதல்கட்டமாகக் கடந்த ஜூலை மாதம் ஐந்து விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. மீதமுள்ள விமானங்கள் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வந்துள்ள இந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் செயல்படும் கோல்டன் ஏரோஸ் என்ற விமானப்படையின் 17 வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன.

ரஃபேல் விமானம்
ரஃபேல் விமானம்
AP

இந்நிலையில் முதல்முறையாக ரஃபேல் போர் விமானங்களை இயக்க சிவாங்கி சிங் என்ற பெண் விமானி இந்தப் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார். வாரணாசியைச் சேர்ந்த சிவாங்கி, இந்திய விமானப்படையில் இருக்கும் 10 பெண் போர் விமானிகளில் ஒருவர். தன் சிறு வயதிலிருந்தே விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த இவர், தன் பள்ளியிலிருந்த சாரணர் படையில் சேர்ந்து பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார். தொடர்ந்து வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்து, 2017-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட பெண்கள் போர் விமானிகளின் இரண்டாவது தொகுப்பில் விமானியாக இணைந்துள்ளார்.

`இதுதான் முதல்முறை!' கடற்படையில் சாதித்த 2 பெண்கள்... ரஃபேலுக்கும் வருகிறார் பெண் போர் விமானி!

இந்திய விமானப்படை தன் ரஃபேல் விமானங்களை லடாக் பகுதியில் இயக்குகிறது. அங்கு இந்திய ராணுவம் மிகவும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. சீனாவுடனான எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியில் ஐ.ஏ.எஃப்பின் தற்போதைய ஐந்து ரஃபேல் போராளிகள் அங்கு முழுமையாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் லடாக் பகுதியில் எந்த நேரத்திலும் தங்கள் பணியை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர். அந்தப் படையில்தான் சிவாங்கியும் இணையவுள்ளார்.

Rafale | ரஃபேல்
Rafale | ரஃபேல்
Indian Air Force

தற்போது அவருக்குத் தரப்பட்டிருக்கும் கன்வெர்ஷன் பயிற்சி முடிந்ததும் இந்தியாவின் கோல்டன் ஏரோஸ் படையில் இணைந்து ரஃபேல் போர் விமானத்தை இயக்குவார். ``இரண்டு தசாப்தங்களின் பெரும் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில வருடங்களில் பெண்கள் பல துறைகளில் பெரும் உச்சத்துக்கு முன்னேறியுள்ளனர். தற்போது அவர்களுக்கான மற்றுமொரு கதவும் திறக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் புதிய இயந்திரம் சிவாங்கியிடம் வழங்கப்பட்டுள்ளது. வானத்தைத் தொடச் செல் பெண்ணே” என்று முன்னாள் விங் கமாண்டர் அனுபமா ஜோஷி சிவாங்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு