Published:Updated:

`முதலில் நீங்கள் வெளியிடுங்கள் பிறகு எங்களிடம் கேட்கலாம்’ - மோடியைச் சீண்டும் அனுராக் காஷ்யப்

`மோடி, முதலில் நீங்கள் உங்கள் தந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிடுங்கள்’ என பாலிவுட் நடிகர் அனுராக் பிரதமரை விமர்சித்துள்ளார்.

மோடி - அனுராக்
மோடி - அனுராக்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்கள் கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டன.

போராட்டம்
போராட்டம்

உயிரிழப்பு, படுகாயம், கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு, தடியடி, பொதுச் சொத்துகளுக்குச் சேதம், வாகனங்களுக்குத் தீவைப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்தன. இவை அனைத்தும் தற்போதுதான் சற்று ஓய்ந்துள்ளது. அதற்குள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இது போராட்டம் நடத்திய அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாகியது.

`கேமராவுக்கு முன் மட்டும்தான் செயல்படுகிறார்!' - பிரதமர் மோடியை விமர்சித்த அனுராக் காஷ்யப்

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பையும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்பட்டுவிட்டது. மோடி, முதலில் நீங்கள் உங்கள் ஆவணங்களைக் காட்டுங்கள். உங்கள் படிப்பின் முழு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தையின் பிறந்த சான்றிதழ் ஆகியவற்றை வெளியிடுங்கள். பிறகு, எங்களிடம் கேட்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தொடர்ச்சியாக மத்திய அரசு, மோடி மற்றும் அமித்ஷாவை நேரடியாக விமர்சித்து வருகிறார். முன்னதாக குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தார். தொடர்ந்து ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல், அவர்களின் போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டது போன்ற பல விஷயங்களில் தன் கருத்தை முன்வைத்துள்ளார்.