Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: `கடும் காய்ச்சல்; கண்காணிப்பு!’ - சித்தராமையாவுக்குத் தொடர் சிகிச்சை

சித்தராமையா
சித்தராமையா

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதிக காய்ச்சல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாகக் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாகக் கர்நாடகாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் அங்கு 4,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500 ஆகவும் அதிகரித்துள்ளது.

எடியூரப்பா
எடியூரப்பா

இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸை சேர்ந்தவருமான சித்தராமையாவுக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா: `ஆளுநருடனான சந்திப்பு; நோ அறிகுறி!’ - கர்நாடக முதல்வருக்கு வைரஸ் பாசிட்டிவ்

இதுதொடர்பாகப் பேசியுள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு,``சித்தராமையா நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் அவருக்கு அதிக காய்ச்சல் இருந்து வருகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை தொடர்பாகத் தொடர் விசாரணை நடந்து வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா நலமுடன் உள்ளார், அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அடுத்த 10 நாள்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

சித்தராமையா
சித்தராமையா

முன்னதாக, சித்தராமையாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் அம்மாநில வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டிலுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதால் அவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு