Published:Updated:

`உடைந்த குரல்; பேச்சில் மாற்றம்!' - சித்தார்த்தாவிடம் கடைசியாகப் பேசிய நண்பர் உருக்கம்

கலிலுல்லா.ச

``சித்தார்த்தா வழக்கமாகப் பேசும்போது, அவர் பேச்சில் உறுதித்தன்மை இருக்கும். ஆனால், அவரின் அன்றைய பேச்சில் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன்.

சித்தார்த்தா
சித்தார்த்தா

`ஒரு நிமிட முடிவு... எல்லாவற்றையும் மாற்றிவிடும்’ காஃபி டே சித்தார்த்தாவின் முடிவும் அப்படித்தான் இருந்திருக்கிறது. `காஃபி டே’வைப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. பின்னிரவுகளில்கூட காஃபி டேக்கள் திறந்திருக்கும். மிகப்பெரிய நிறுவனமாக இதை வளர்த்தெடுத்தவர் சித்தார்த்தா. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான இவர், நேற்று முன்தினம் மாலை காணாமல்போனார். கர்நாடகாவின் சிக்மங்களூருவில் உள்ள தன் காபி தோட்டத்துக்கு வேலை விஷயமாக நேற்றைய முன்தினம் சென்றுள்ளார் சித்தார்த்தா. அங்கு வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டுத் திரும்பும்போது, தன் கார் டிரைவரிடம் கேரளா செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். டிரைவருடன் சிக்மங்களூரு - மங்களூரு நெடுஞ்சாலை வழியாகக் கேரளாவுக்கு பயணமாகியுள்ளார்.

காஃபி டே
காஃபி டே

மங்களூர் நெடுஞ்சாலையில் கார் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, `காரை நிறுத்துங்கள்’ என்று தன் டிரைவரிடம் கூறியுள்ளார். காரிலிருந்து இறங்கிய அவர், `உள்ளே இரு சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிச் செனற சித்தார்த்தா, நேரம் கடந்தும் திரும்பவில்லை. பதற்றமடைந்த டிரைவர், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது `ஸ்விட்ச் ஆஃப்’ என்று வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சித்தார்த்தாவின் வீட்டுக்கு டிரைவர் தகவல் கூறியிருக்கிறார். ஜெப்பினா மோஹரு (Jeppina Mogaru) என்ற இடத்தில் சித்தார்த்தா காணாமல் போயுள்ளார். அந்தப் பகுதிக்கு அருகில்தான் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. இதனால் அவர் ஆற்றில் குதித்திருக்கலாம் என்ற அடிப்படையில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன.

ஹெலிகாப்டர், படகுகள் மூலம் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இறுதியில், `சித்தார்த்தாவின் சடலம் கரை ஒதுங்கியது. உடற்கூராய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்தார்த்தாவின் நண்பர் ஜாவித் பர்வேஸ், அவரிடம் கடைசியாகப் பேசிய நிகழ்வு குறித்து பகிர்ந்துள்ளார்.

தேடும் பணி
தேடும் பணி

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேசிய அவர், ``அதிகாலை 6.06 மணிக்கு சித்தார்த்தாவின் பெயர் என் மொபையில் ஒலித்தது. சித்தார்த்தா உடனான பேச்சு 58 நொடிகள் மட்டுமே நீடித்தது. அப்போது அவர் இப்படியொரு முடிவை எடுப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார்.

கம்யூனிச தலைவராக நினைத்தவர் கஃபே காபி டே ஓனர்... சித்தார்த்தா பயோ! #VGSiddhartha #CafeCoffeeDay

சித்தார்த்தா கடைசியாகத் தொடர்புகொண்டுபேசியது ஜாவித்திடம் தான். ``சித்தார்த்தா வழக்கமாகப் பேசும்போது, அவர் பேச்சில் உறுதித்தன்மை இருக்கும். ஆனால், அன்றைய அவர் பேச்சில் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். மன உளைச்சலுக்கு ஆளான ஒருவரின் பேச்சைப்போல அவருடைய பேச்சு இருந்தது. எந்த காரணத்துக்காக அவர் கவலையிலிருந்தார் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் நான் அவரிடம், `எல்லாம் சரியாகிவிடும்’ என்றேன்.

சித்தார்த்தா
சித்தார்த்தா

அதற்கு அவர், `என்ன நடக்கிறதென்றே எனக்குத் தெரியவில்லை’ என்றார் உடைந்த குரலுடன். சந்தை நிலவரம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என முடித்துக்கொண்டார்” என்கிறார் நண்பர் ஜாவித்.