'30,000 நேரடி வேலை வாய்ப்புகள், இந்தியாவின் முதல் காஃபி டே செயின் நிறுவனம், ஆசியாவின் மிகப்பெரிய காபி தோட்டத்துக்கு சொந்தக்காரர்' என மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பியவர்தான் வி.ஜி.சித்தார்த்தா. அவரின் மறைவு, கர்நாடகா மட்டுமல்ல... இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள் மத்தியிலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். அவரது உடல், நேத்ராவதி ஆற்றின் கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் சிக்மகளூருவில் உள்ள அவரது காஃபி தோட்டத்தில் கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் முதல்வரும் மாமனாருமான எஸ்.எம்.கிருஷ்ணா, இந்நாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சித்தார்த்தா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்தினர். இதற்கிடையே, சித்தார்த்தாவின் மறைவில் உள்ள மற்றொரு சோகச் சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. சித்தார்த்தா உயிரிழந்தது, அவரது தந்தை கங்கையா ஹெக்டேவுக்கு இன்னும் தெரியாது என்பது தான் அந்த கூடுதல் சோகம். 96 வயதாகும் கங்கையா, முதுமையின் காரணமாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிவருகிறார். 15 நாள்களுக்கு முன்புதான், இதற்காக மைசூருவில் உள்ள உறவினர் மருத்துவமனையில் தந்தையை அனுமதித்துள்ளார், சித்தார்த்தா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
காணாமல்போவதற்கு மூன்று நாள்கள் முன்புகூட மருத்துவமனைக்குச் சென்ற சித்தார்த்தா, தனது தந்தையின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டு மருத்துவமனையிலேயே கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள சித்தார்த்தாவின் உறவினர்கள், ``அதுதான் தந்தைக்கும் மகனுக்குமான கடைசி சந்திப்பு என நினைக்கிறோம். அன்று, மருத்துவமனையில் தந்தையின் உடல் நிலையை நினைத்து அழுதவர், எங்களிடம் மீண்டும் வந்து தந்தையை சந்திப்பேன் எனக் கூறிவிட்டுதான் போனார். ஆனால், அதற்குள் அவர் மனத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.

இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். கடைநிலை ஊழியர்கள் முதல் அனைவரிடமும் சித்தார்த்தா அன்பாகப் பழகுகிறார் என்றால் அதற்குக் காரணம், அவரது தந்தை கங்கையாதான். குழந்தையாக இருந்தது முதல் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் தனது தந்தையிடம் இருந்தே கற்றுக்கொண்டார். அதற்கேற்றாற் போலவே நிறைய சாதனைகளைச் செய்து, தனது தந்தையை பெருமைப்படுத்தினார் சித்தார்த்தா. ஆனால், மகனின் மரணம் குறித்துத் தெரியாமலும், அவரின் இறுதிச்சடங்கில் கங்கையாவால் பங்கேற்க முடியாததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வகையில், கங்கையா எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை என்பது நல்லதுதான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் நல்ல நிலையில் இருந்து இப்படி ஒரு துயரம் நிகழ்ந்திருந்தால், அவருக்கு வேறுமாதிரியான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். நல்ல வேளை, கடவுள் அவரை அதிர்ச்சியிலிருந்து காப்பாற்றியுள்ளார்" என்று சோகத்துடன் கூறியுள்ளனர். சிக்மகளூருவைச் சேர்ந்த கங்கையா- வசந்திக்கு குழந்தை இல்லாமல் இருந்து, பல வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர்தான் சித்தார்த்தா. அவரின் குடும்பத்தினர் பரம்பரையாக காபி தோட்ட விவசாயம் செய்துவந்தவர்கள்.

அந்தப் பரம்பரையின் முதல் தலைமுறை தொழிலதிபர்தான் சித்தார்த்தா. தனது திறமையாலும் கடுமையான உழைப்பினாலும் காஃபி டே ஷாப்பை உலகம் முழுக்க நிறுவினார். அதற்காக, இளம் வயது முதல் உழைத்தார். தந்தைக்குப் பிறகு காஃபி உற்பத்தித் தொழிலை கவனிக்க சித்தார்த்தாவுக்கு விருப்பமில்லை. அதனால், அவர்களிடம் அனுமதிபெற்று, பெங்களூருவுக்குச் சென்று காஃபி டேவை ஆரம்பித்துள்ளார்.