Published:Updated:

சேலம்:`17.4 கிலோ எடை; ரூ. 11 லட்சம் மதிப்பு!’ - அயோத்திக்கு சென்ற வெள்ளி செங்கல்

ராமர் கோயில் கட்ட
ராமர் கோயில் கட்ட

1990 வாக்கில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு சேலத்திலிருந்து செங்கல் கொண்டு சென்றதைப் பார்த்திருக்கிறேன். நானும், என்னுடைய நண்பர்களும் வெள்ளித் தொழில் செய்யக்கூடியவர்கள் என்பதால் வெள்ளியில் செங்கல் கொண்டு செல்ல முடிவெடுத்தோம்.

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சேலத்திலிருந்து வெள்ளி செங்கல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளி செங்கல் 17.4 கிலோ எடையும் 11.38 லட்சம் மதிப்பும் உடையது.

ராமர் கோயிலுக்கு வெள்ளி செங்கல்
ராமர் கோயிலுக்கு வெள்ளி செங்கல்

இந்த வெள்ளி செங்கல்லை பா.ஜ.க-வின் சேலம் மாவட்ட முன்னாள் தலைவரும் மேற்கு மாவட்ட பார்வையாளருமான கோபிநாத் தயாரித்து கொண்டு சென்றுள்ளார். இன்று அயோத்தியில் வெள்ளி செங்கல் ஒப்படைக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்றது.

கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம், ராமர் கோயில் கட்டுவதற்கு தடை இல்லை எனத் தெரிவித்தது. அதையடுத்து நாளை (5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்காக நாடு முழுவதிலிருந்தும் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் சேலத்திலிருந்து வெள்ளி செங்கல் சென்றுள்ளது.

ராமர் கோயிலுக்கு வெள்ளி செங்கல்
ராமர் கோயிலுக்கு வெள்ளி செங்கல்

இதுபற்றி பா.ஜ.க சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத், ''பல்லாண்டு கால சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. அதையடுத்து அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் மிகப் பிரமாண்ட அளவில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை வரும் 5-ம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது.

ராமர் கோயில் கட்டுமானப் பணியில் சிறிதளவு நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டுமெனக் கருதினேன். 1990 வாக்கில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு சேலத்திலிருந்து செங்கல் கொண்டு சென்றதைப் பார்த்திருக்கிறேன். நானும், என்னுடைய நண்பர்களும் வெள்ளித் தொழில் செய்யக்கூடியவர்கள் என்பதால் வெள்ளியில் செங்கல் கொண்டு செல்ல முடிவெடுத்தோம்.

ராமர் கோயிலுக்கு
ராமர் கோயிலுக்கு

அதையடுத்து நானும் என்னுடைய நண்பர்களும் சேர்ந்து ஆளுக்கு ஒரு தொகையைப் போட்டு வெள்ளியில் 9 இன்ச் நீளம், 4 இன்ச் அகலம், 3 இன்ச் உயரத்தில் என மொத்தம் 17.4 கிலோ எடையில் வெள்ளி செங்கல் தயாரித்தோம். சேலத்திலிருந்து வெள்ளி செங்கலை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு கொண்டு செல்லுவதைப் பெருமையாக நினைக்கிறோம். இது எங்கள் வாழ் நாளில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு