Published:Updated:

’தப்பு பண்றது சகஜம்னு ஐன்ஸ்டீனே சொல்லியிருக்காரு!’ - பியூஷ் கோயலின் புது விளக்கம்

சத்யா கோபாலன்

புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது ஐன்ஸ்டீன் என வாய் தவறி கூறிவிட்டதாக, அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

piyush goyal
piyush goyal

வரலாற்று நிகழ்வுகள் போன்ற பல தகவல்களை அரசியல் தலைவர்கள் தவறாகப் பேசி சர்ச்சையில் சிக்கியதை நாம் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். சமீபகாலமாக, அது சற்று அதிகமாகிவருகிறது என்றே கூற வேண்டும். மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களின் சேவையே காரணம்’ எனக் கூறினார்.

Newton - einstein
Newton - einstein

இவரின் கருத்து மீதான விமர்சனம் அடங்கும் முன்பே, மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேறொரு கருத்தைக் கூறி மொத்த நெட்டிசன்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “ 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கியே நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு 12 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவையில்லை.

`அமைச்சரின் உளறலால் இந்திய அளவில் டிரெண்டாகும் நியூட்டன், ஐன்ஸ்டீன்'- ட்விட்டரில் அதகளம்!

தொலைக்காட்சியில் வரும் தகவல்களை யாரும் கருத்தில் கொள்ள வேண்டாம். புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை. எனவே, இதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறியிருந்தார்.

`பொருளாதாரம் பற்றி அமைச்சர் தவறாகப் பேசிவிட்டார்' எனப் பலரும் நினைத்த வேளையில் அவர் மாற்றிக் கூறிய ஒற்றை பெயர்தான் ட்விட்டரை ஆக்கிரமித்தது.

Twitter
Twitter

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது ஐசக் நியூட்டன். ஆனால், அமைச்சர் ஐன்ஸ்டீன் எனக் கூறிவிட்டார். ஐன்ஸ்டீன், நியூட்டன், பியூஸ் கோயல் ஆகிய மூன்று பெயர்கள்தான் நேற்று ட்விட்டரைத் தெறிக்கவிட்டன.

இந்நிலையில் தான் பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார் பியூஷ் கோயல். ” நியூட்டனுக்குப் பதிலாக ஐன்ஸ்டீன் என நான் மாற்றிக் கூறிவிட்டேன். ‘தவறே செய்யாத ஒரு மனிதன் தன் வாழ்வில் எதையும் புதிதாக முயலவில்லை என்று அர்த்தம்’ என ஐன்ஸ்டீனே கூறியுள்ளார்.

நான் வாய் தவறிக் கூறிவிட்டேன். நான் சொன்ன கருத்துகள் வைரலாவதற்குப் பதிலாக, நான் தவறாகப் பேசியது பெரிதாகிவிட்டது. என்னைப் போல தவறு செய்தவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஆனால், தன் தவற்றை திருத்திக்கொண்டு செயல்பட வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுவெளியில் நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

piyush goyal
piyush goyal

அதேநேரம், ” புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு வேண்டுமானால் கணக்கு தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், அது நியூட்டனுக்கு நிச்சயம் தேவைப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தைச் சரிசெய்யவும் கணக்கு தேவைப்படும்” என்று நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்.