Published:Updated:

`கொரோனா பரவலை வேகப்படுத்தும் முக்கியக் காரணி புகையிலை!’ - மத்திய சுகாதாரத்துறை

புகையிலை
புகையிலை

புகைப்பிடிப்பதினால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகையிலைப் பயன்படுத்துபவர்களுக்கு கொரோனா மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புகைபிடிப்பவர்கள் கொரோனா வைரஸின் கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளாவதுடன் உயிரிழக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், புகை பிடிப்பதால் விரல்கள், உதடுகளுடன் தொடர்புகொள்கின்றன. இது கையில் இருக்கும் வைரஸை வாய்க்கு பரவும் வாய்ப்பை அதிகரிக்கிறது. கொரோனா பரவலை வேகப்படுத்தும் முக்கிய காரணியாகப் புகையிலை உள்ளது.

பட்டாசுப் புகை பாக்டீரியா, வைரஸ்களைக் கொல்லும், ஆனால்..! - மருத்துவர் சொல்லும் காரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுவதன் மூலமும் தும்முவதன் மூலமும் வைரஸ் எளிதாகப் பிறருக்குப் பரவுகிறது எனவே, புகையிலைப் பொருள்களான பான், குட்கா ஆகியவற்றை மெல்லுவதால் அது எச்சில் துப்புவதற்கான தூண்டுதலை அதிகரிக்கிறது. இந்தக் கடுமையான கொரோனா காலகட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவது என்பது சுகாதார அபாயங்களை அதிகரிக்கிறது. பொதுவாகவே, புகையிலை பயன்படுத்தினால் காசநோய், சுவாசம் தொடர்பான பல நோய்களை உண்டாக்கும்.

சிகரெட்
சிகரெட்

அதிலும் கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலைத் தாக்குவதால் புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவிலிந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக உள்ளது. புகையிலையில் புற்றுநோய் உண்டாக்கும் 69-க்கும் அதிகமான ரசாயனங்கள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு உயிரணுக்களை அடக்குகின்றன. இதனால் உடல் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடுவது கடினமாக உள்ளது. புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் அடுத்த 12 மணி நேரத்துக்குள் ரத்த ஓட்டத்தில் கார்பன்டை ஆக்ஸைடு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. பின்னர் 12 வாரத்துக்குள் ரத்த ஓட்டம் சீராகி நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஊரடங்கில் அதிகரித்த ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனி, மது, புகையிலை நுகர்வு!’ -கனடா ஆய்வில் அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு