Published:Updated:

கர்நாடகா: `இந்தத் திறமை வேறு நாய்களுக்கு இல்லை!' - 12 கி.மீ ஓட்டத்தில் சிக்கிய கொலையாளி

மோப்ப நாய் துங்கா
மோப்ப நாய் துங்கா ( Twitter/@SpDavangere )

கர்நாடகாவில் நடந்த ஒரு கொலைச் சம்பவத்தில் குற்றவாளியை வெறும் 2 மணிநேரத்தில் பிடித்து அசத்தியுள்ளது மோப்ப நாய் துங்கா.

கர்நாடக மாநிலம் டேவனகேரே மாவட்டம் காஷிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்திர நாயக் மற்றும் சேத்தன். உறவினர்களான இருவரும் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தார்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகை, பணம் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். அப்போது சேத்தனிடம் கொள்ளையடித்த பணத்தில் சரி பாதி தனக்கு வேண்டும் எனவும் தர மறுத்தால் இந்த விஷயத்தை போலீஸிடம் தெரிவித்து விடுவேன் என்றும் சந்திர நாயக் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தான் கூறும் இடத்துக்கு வந்தால் பணம் தருகிறேன் எனச் சொல்லி சந்திர நாயக்கை தனியாக அழைத்து, கொள்ளையடித்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார் சேத்தன்.

மோப்ப நாய் துங்கா
மோப்ப நாய் துங்கா
Twitter/@SpDavangere

ஜூலை 10-ம் தேதி நடந்த இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காவலர்களின் நீண்ட விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர். பின்னர் ஜூலை 13-ம் தேதி இரவு கொலை நடந்த இடத்துக்குக் கர்நாடக காவல்துறையைச் சேர்ந்த பயிற்சி மோப்ப நாய் துங்கா வரவழைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் வந்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளது. நாய் தொடர்பாகத் தகவல் வைரலான பிறகு இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

`ஆன்லைன்ல 5,000 ரூபாய், அதனால நாங்களே பண்ணிட்டோம்!' -கால்களை இழந்த நாய்; நெகிழவைத்த ஏழைத் தம்பதி

இதுபற்றிப் பேசியுள்ள சென்னகிரி மண்டல போலீஸ் சூப்பிரண்டு பிரஷாந்த், “கொலை நடந்து 3 நாள்களுக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் துங்கா சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டான். அவன் அங்கு வந்ததும் சில நிமிடங்கள் அந்த இடத்தைச் சுற்றி மோப்பம் பிடித்துவிட்டு ஓடத்தொடங்கினான். சுமார் 12 கி.மீ தூரம் ஓடியும் எங்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

இறுதியாக இரவு 11.30 மணிக்கு ஒரு வீட்டின் அருகில் நின்று அந்த இடத்தையே தொடர்ந்து சுற்றிவந்தான். அது சந்திர நாயக்கின் உறவினர் சேத்தனின் வீடு. எங்களைப் பார்த்ததும் தப்பிக்க முயன்ற அவரைப் பிடித்து விசாரித்ததில் சந்திர நாயக் தான் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். 3 நாள்களாக எங்களால் பிடிக்க முடியாத குற்றவாளியை 2 மணிநேரத்தில் துங்கா பிடித்துவிட்டான்.

மோப்ப நாய் துங்கா
மோப்ப நாய் துங்கா
Twitter/@SpDavangere

துங்கா மிகவும் அதிக மோப்ப திறன் கொண்டவன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் இந்த துறையில் பல மோப்ப நாய்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவனின் திறமை வேறு நாய்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும். கொலைக் குற்றம் நடந்த இடத்தில் நாயக்கின் தொப்பியை மோப்பம் பிடித்து கொலையாளியைக் கண்டுப்பித்தான். அவனுக்கு 9 வயதுதான் ஆகிறது. முன்னதாக ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க மோப்பநாய் ஓடிய அதிக தூரம் 8 கி.மீதான். ஆனால், தற்போது அதை துங்கா முறியடித்துவிட்டது” எனப் பெருமையாகப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு