Published:Updated:

இந்திய ராணுவத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் பயன்படுத்த கட்டுப்பாடு- ஏன்?

`இருளிலிருந்து செயல்படும் ஏஜென்டுகள் சிலர் ராணுவ வீரர்களின் சமூக வலைதளங்கள், அவர்களது போன்களை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்’

ராணுவம் வாட்சப்
ராணுவம் வாட்சப்

இந்திய வாட்ஸ்அப்கள் `பெகாஸஸ்’ என்னும் இஸ்ரேலிய உளவு அப்ளிகேஷன் கொண்டு கண்காணிக்கப்பட்டது வாட்ஸ்அப் நிறுவனத்தால் அண்மையில் உறுதிசெய்யப்பட்டது. இது இந்திய தகவல்தொழில்நுட்பத்துறையின் பாதுகாப்புச் சூழல்குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கிடையே, ராணுவத்தினர் இனி வாட்ஸ்அப் உபயோகிக்க வேண்டாம் என்று ராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் உளவு ஏஜென்டுகள் இந்திய ஆயுதப்படை தொடர்பான தகவல்களைத் திருட முயல்வதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், முக்கியப் பதவிகளில் இருக்கும் அலுவலர்களை ஃபேஸ்புக் உபயோகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

Social media
Social media

சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ராணுவத்தில் இருக்கும் 13 லட்சம் பேருக்கும் அடிக்கடி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தாலும், அண்மைக்காலங்களில் சில ராணுவ வீரர்களின் மொபைல் எண்கள் முன்பின் அறியாத சில வெளிநாட்டு குரூப்களில் சேர்க்கப்பட்டன. மேலும், உளவாளிகள் பெண்களை வைத்து ராணுவ வீரர்களுக்கு வலை விரிப்பதும் தொடர்கிறது. இதனால் டெல்லி மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள். இது தொடர்ந்துவரும் நிலையில், இனி அறவே வாட்ஸ்அப்களைத் தவிர்க்கும்படி வீரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது இந்திய ராணுவம்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள இந்திய ராணுவத்தின் சைபர் பிரிவு, ``2016 ஜூலை தொடங்கி இந்திய ராணுவத்தின் கொள்கை ஒன்று அமலில் இருக்கிறது. அதன்படி, ராணுவத்தின் பாதுகாக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்படும் நிலையில், அதில் தொடர்புடைய ராணுவ வீரர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். போர்க்கப்பலைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்வது, தங்களது பாதுகாப்புப் பணிகள் குறித்த செய்திகளைப் பகிர்வது உள்ளிட்டவை ராணுவ செயல்பாடுகளுக்கு எதிரானவை.

வாட்சப்
வாட்சப்

ராணுவத்தினர், குறிப்பாக ரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்படுபவர்களின் போன்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சோதனை செய்யப்படும். அதில் சந்தேகப்படும்படியாக ஏதும் தென்படாத நிலையில், அவர்கள் அதே மொபைல் போன்களை உபயோகிக்கலாம். சந்தேகப்படும்படியாக எதுவும் தென்படும் சூழலில் அவர்கள் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுடைய போனும் மாற்றப்படும். இருளிலிருந்து செயல்படும் ஏஜென்டுகள் சிலர் ராணுவ வீரர்களின் சமூக வலைதளங்கள், அவர்களது போன்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதாலேயே இந்த நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒருவருடைய போன் அவர் வசம் இருக்கும்வரை மட்டும் அவரது வாட்ஸ்அப் செய்திகள் பாதுகாப்பாக இருக்கும். அதனால் முக்கியத் தகவல்களைக் கூட இனி வாட்ஸ்அப் அல்லது இதர ஊடகங்கள் வழியாகவும் பரிமாறிக்கொள்ள வேண்டாம் என்றும் ராணுவ சைபர் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மொபைல் பற்றிய விவரங்கள் இல்லாமலே, ஒருவருடைய வாட்ஸ்அப்பை எளிதாக ஹேக் செய்யமுடியும் என்று அண்மையில் நிகழ்ந்த `பெகாஸஸ்’ உளவு வெட்டவெளிச்சமாக்கியது.

வாட்சப்
வாட்சப்

மற்றொருபக்கம், இந்திய அரசு, அண்மையில் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்படுவது பற்றியும் மக்கள் எப்படி அதை அறிந்துகொள்வது என்பது பற்றியும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வாட்ஸ்அப்புக்கு அனுப்பப்படும் mp4 ரக ஃபைல்கள் வழியாக அவரது வாட்ஸ்அப் உளவுபார்க்கப்படுகிறது என்றும் இந்த வகை உளவு பார்க்கும் ஃபைல்களுக்கு வாட்ஸ்அப் உபயோகிப்பாளரின் அனுமதி தேவைப்படுவதில்லை என்றும் `குறிப்பிட்ட நபர் அந்த ஃபைலைத் தரவிறக்கம்செய்த உடனேயே அது அவரின் போனையும் ஹேக் செய்துவிடுகிறது’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தபடியும் இப்படி வாட்ஸ் அப்பை ஹேக் செய்யலாம். இதைத் தவிர்க்க ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ்-களின் அண்மைய வெர்ஷன்களுக்கு அப்டேட் செய்யச்சொல்லி மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்திய ராணுவம் உட்பட நாட்டின் முக்கிய சைபர் பரிமாற்றங்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுவரும் நிலையில், இந்தத் தொடர் சம்பவங்கள் நமது சைபர் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளன.

ஸ்னோடென் குறிப்பிட்ட பெகாஸஸ், இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவக் காரணம் என்ன?