Election bannerElection banner
Published:Updated:

``இடுக்கி டு தலைமைச் செயலகம் வித் செல்பி!" -சமூக சேவகரால் டென்ஷனான பினராயி

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் கடும் கட்டுப்பாடு அவசியம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், ``இதற்கு முந்தைய நாள்களை விட இப்போது மோசமான நாளாக உள்ளது. ஒரேநாளில் மட்டும் 39 பேருக்குக் கொரோனா பாதித்துள்ளது. இப்போது மொத்தம் 164 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இப்போது வைரஸ் பாதித்ததில் 34 பேர் காசர்கோட்டைச் சேர்ந்தவர்கள். மாநிலம் முழுவதும் 1, 14,299 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 616 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா இதுவரை இல்லாத அளவில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்போது உள்ள கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும். எந்த நிலையையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதில்லை. அறிகுறி தென்பட்டால் முதலில் அவரை தனிமைப்படுத்தி பின்னர் சாம்பிள்களை சோதனைக்கு அனுப்புகிறோம்.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இப்போது கண்டறியப்படும் புதிய நோயாளிகள் அதிகமானபேரை தொடர்புகொண்டு விசாரித்தால் பல இடங்களுக்குச் சென்றவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. கொரோனா பாதித்த இடுக்கியைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவரின் பயணம் மற்றும் தொடர்பு மலைக்க வைக்கிறது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை அவர் பயணித்திருக்கிறார். தொடுபுழா, பாலக்காடு, எர்ணாகுளம் என அவரது பயணம் நீளமானது. மெடிக்கல் காலேஜ், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள், தலைமைச் செயலகம், சட்டசபை அலுவலகம் என அவரது தொடர்பு நீளமானது. அவர் தொடர்புகொண்டதில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் எனப் பலதரப்பட்டவர்கள் உண்டு. அவர்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது நம் ஒவ்வொருவருக்குமான எச்சரிக்கையாகும். கொரோனா வெகு தூரத்தில் இல்லை. எனவே நாம் நம்மை தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா வைரஸை நாம் சீரியசாக எடுத்த காலத்தில் பல இடங்களில் கூட்டமாக போராட்டங்கள் நடந்தன. அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயத்தில் சில நாள்களுக்கு முன்பு இந்தப் போராட்டங்கள் நடந்தன. எனவே, எல்லோரும் அதிக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காசர்கோட்டில் உள்ள மக்கள் கர்நாடகா மாநிலத்தின் மங்களூர் போன்ற இடங்கள் அருகில் இருப்பதால் டயாலிசீஸ் போன்ற சிகிச்சைக்காக தினமும் சென்று வந்தனர். இப்போது யாரும் அங்கு செல்ல முடியவில்லை. கண்ணூருக்கு வந்து அவர்களால் சிகிச்சை எடுக்க முடியாத நிலை. எனவே அதற்கான பரிகாரம் என்னவென்று நாமும் ஆலோசிப்பதுடன், கர்நாடக அரசுடனும் ஆலோசிப்போம்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கர்நாடக கேரள எல்லையில் மண் போட்டு போக்குவரத்தைத் தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு இது எதிரானது. அப்படி தடுத்தால் அவசர நிலையில் இரண்டு அரசும் எப்படி செயல்பட முடியும். இதை கர்நாடகா சீரியசாக விவாதித்து வருகிறது. மண்ணை மாற்றலாம் என சம்மதித்துள்ளனர். வேறு நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். கொரோனா பெரிய அளவில் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கண்ணூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி கோவிட் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. அங்கு 200 படுக்கைகள், 40 அவசர சிகிச்சை படுக்கைகள், 15 வென்டிலேசன் உள்ளது. காசர்கோடு சென்ட்ரல் யுனிவர்சிட்டி கோவிட் ஆரம்ப நிலை சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது. டெஸ்டிங் நடத்தும் வசதி அங்கு உள்ளது. ஐ.சி.எம் அனுமதிக்கான நடவடிக்கை நடந்து வருகிறது. காசர்கோடு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி கோவிட் மருத்துவமனையாக உடனடியாக மாற்றப்படும்.

சாலையில் செல்பவர்களைத் தடுக்கும் போலீஸின் நடவடிக்கை தொடரும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். யாரையும் சங்கடப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கவில்லை, பொது நலனுக்காக இது எடுக்கப்படுகிறது. போலீஸார் கடும் வெயிலில் நிற்பதால் அவர்களுக்குத் தேவையான தண்ணீரை அப்பகுதி மக்கள், குடியிருப்போர் சங்கத்தினர் வழங்க வேண்டும். அவர்கள் நம் நாட்டுக்காக வெயிலில் நிற்கிறார்கள். எனவே அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு