Published:Updated:

`காங்கிரஸ் வலுவாக இருக்கும்வரை தைரியமாக இருப்பேன்!’ - சோனியா சந்திப்புக்குப்பின் சிதம்பரம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

P. Chidambaram
P. Chidambaram

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாகப் பெறுவதில் கார்த்தி சிதம்பரம் உதவினார் என்றும் அவருக்கு ப.சிதம்பரம் துணையிருந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமானது.

P. Chidambaram
P. Chidambaram

தற்போது சிறையில் இருக்கும் இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ப.சிதம்பரத்தைக் கடந்த மாதம் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். செப்டம்பர் 5-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் நீதிமன்றக் காவல் இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரின் சிறைக்காவல், அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள சிதம்பரத்தை அவரின் குடும்பத்தினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திகார் சிறைக்குச் சென்று ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். சிதம்பரத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணையிருக்கும் என்பதைக் காட்டவே இந்த சந்திப்பு எனக் கூறப்படுகிறது.

Sonia Gandhi -  Manmohan Singh
Sonia Gandhi - Manmohan Singh
ANI

இவர்களுடன் கார்த்தி சிதம்பரமும் சிறைக்குச் சென்று தன் தந்தையைச் சந்தித்துள்ளார். பின்னர் சிறைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சிறைக்கு வந்து என் தந்தையைச் சந்தித்து ஆதரவு வழங்கியதற்கு எங்கள் குடும்பம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும். இந்த அரசியல் சண்டையில் அவர்களின் சந்திப்பு எங்களுக்குப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

`நான் பயன்படுத்தியதால் நாற்காலியைக் கூட எடுத்துவிட்டார்கள்!' - நீதிபதியிடம் முறையிட்ட ப.சிதம்பரம்

இதையடுத்து சோனியா காந்தி சந்திப்பு பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ``சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் என்னை வந்து சந்தித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சி வலுவாகவும் தைரியமாகவும் இருக்கும் வரை நானும் பலமாகவும் தைரியமாகவும் இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

P. Chidambaram Tweet
P. Chidambaram Tweet
Twitter

மேலும், ``வேலையின்மை, இருக்கும் வேலைகள் இழப்பு, குறைந்த ஊதியம், கும்பல் வன்முறை, காஷ்மீரில் அனுமதி மறுக்கப்படுதல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் தள்ளுதல் போன்ற அனைத்தும் இந்தியாவில் நன்றாகவே செயல்பட்டு வருகிறது” என மத்திய அரசை விமர்சித்துள்ளார் சிதம்பரம்.