Published:Updated:

வீட்டை பூட்டி அனுமதி மறுத்த மகன்கள்! - மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்

மூதாட்டி
மூதாட்டி ( மாதிரி புகைப்படம் )

மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய ஒரே காரணத்துக்காகச் சொந்த மகன்களே தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

கொரோனா பரவலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கடந்த 10 வருடங்களில் இல்லாத ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய சில மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகமாகவே உள்ளது. அதனால் இந்தப் பகுதிகளிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒரே காரணத்துக்காகத் தன் தாயை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியில் அனுப்பியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர். தெலங்கானா மாநிலம் கரிம்நகர் பகுதியில் இருக்கும் கிசான்நகரை சேர்ந்தவர் 70 வயது மதிக்கத்தக்க கட்டா ஷியாமலா என்ற மூதாட்டி. தன் 2 மகன்களுடன் வசித்து வந்த இவர், ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மகாராஷ்டிராவின் சோலாபூரில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் சரியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஷியாமலா மகாராஷ்டிராவிலேயே சிக்கி சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார்.

தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் 2 மாதங்களுக்குப் பிறகு, தன் சொந்த ஊர் திரும்பியுள்ளார் ஷியாமலா. இவர் மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய ஒரே காரணத்துக்காக ஷியாமலாவின் மூத்த மகனும் மருமகளும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வெளியில் அனுப்பியுள்ளனர். தன் தாயின் வருகையை அறிந்த இரண்டாவது மகன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

இதனால் செல்வதற்கு வேறு இடம் இல்லாமல் மூத்த மகன் வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்துள்ளார் ஷியாமலா, இதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக உள்ளூர் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஷியாமலாவின் மூத்த மகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை எச்சரித்து ஷியாமலாவை அதே வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

மகாராஷ்டிராவிலிருந்து திரும்பும்போது அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததும் தான் அவரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவரத்தை ஷியாமலா தன் மகன்களிடம் கூறியும் ஏற்காத அவர்கள், மகாராஷ்டிராவிலிருந்து திரும்பிய ஒரே காரணத்துக்காகப் பெற்ற மகன்களே தாயை விட்டைவிட்டு அனுப்பியுள்ளனர். ஷியாமலாவுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டிருந்தாலும் அவர் 14 நாள்கள் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருக்க வேண்டும். மீண்டும் தெலங்கானாவிலும் ஒருமுறை சோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு