Published:Updated:

`12 நாடுகள்: 2 லட்சம் பேர் ; வரலாற்றில் முதல்முறை’ - இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத்’ திட்டம்

சிறப்பு விமானம்
சிறப்பு விமானம்

கொரோனா நெருக்கடி நேரத்தில் `வந்தே பாரத்’ எனும் திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்தன. நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்துகளும் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அடி விழுந்துள்ளதால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன.

வந்தே பாரத் திட்டம்
வந்தே பாரத் திட்டம்

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு நாளுக்குநாள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தும் மக்களின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி, நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இந்திய நேரப்படி நேற்று மாலை 5:07 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு இரவு கேரளாவின் கொச்சி விமானநிலையத்துக்கு வந்தடைந்தது. அதேபோல் துபாயிலிருந்து மாலை 5:46 மணிக்குக் கிளம்பிய சிறப்பு விமானம் இரவு கோழிக்கோடு வந்தடைந்தது. இந்த இரு விமானங்களிலும் 300-க்கும் அதிகமான மக்கள் பயணம் செய்துள்ளனர். இப்படி வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். சிறப்பு விமானங்களில் பயணிப்பவர்கள் அவர்களின் சொந்த செலவிலேயே பயணச் சீட்டு பெற வேண்டும்.

வந்தே பாரத் திட்டம்
வந்தே பாரத் திட்டம்

பயணிகள் அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். விமானத்தில் பயணம் செய்யும்போது யாருக்கேனும் வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக விமானத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் சுமார் 12 நாடுகளிலிருந்து 15,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்படவுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்கும் இந்தத் திட்டத்துக்கு `வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத ஒருங்கிணைந்த மிகப்பெரும் மீட்பு திட்டம் இது எனக் கூறப்படுகிறது. அடுத்த 2 மாதத்துக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் இந்திய அரசாங்கத்தால் வரலாலாற்றிலேயே அதிக மக்களை மீட்ட திட்டமாக இது விளங்கும்.

வந்தே பாரத் திட்டம்
வந்தே பாரத் திட்டம்

இதற்கு முன் வளைகுடா நாடுகளில் போர் நடந்தபோது அங்கு சிக்கியிருந்த சுமார் 70,000 இந்தியர்களை மத்திய அரசு மீட்டது. 1990-க்குப் பிறகு அதாவது 20 ஆண்டுகளில் தற்போதுதான் அதை விட மிகப்பெரும் மீட்புத் திட்டத்தை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார் , மலேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்தத் திட்டத்தின்கீழ் தங்களை தாயகம் அழைத்துச் செல்ல லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். விமானங்கள் மட்டுமல்லாது போர்க் கப்பல்கள் மூலமும் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

வுகான் நகரில் 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்...சீனாவுக்கு விரையும்  ஏர் இந்திய விமானம்!

இப்படி சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா வரும் மக்கள் 14 நாள்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அவர்கள் விமானத்தில் ஏறும்போதும் சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் இந்தியாவுக்கு வந்த பிறகும் அவர்களுக்குப் பல கட்ட சோதனைகள் செய்யப்படவுள்ளது.

14 நாள் தனிமைப்படுத்தலில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதியானால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். வைரஸ் இல்லாதவர்கள் மேலும் 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருக்கும் மக்கள் அங்குள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு