Published:Updated:

`தீர்ப்புக்குப் பின் எப்படி இருக்கிறது அயோத்தி?' - நேரடி விசிட் #VikatanInAyodhya

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 24 மணிநேரம் கடந்துவிட்ட நிலையில், அயோத்தி எப்படி இருக்கிறது. ஒரு ஸ்பாட் விசிட்.

அனுமன் கோயில், அயோத்தி
அனுமன் கோயில், அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்கு முன்னதாகவே அயோத்தி மட்டுமல்லாது நாடு முழுவதுமே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், அயோத்தியில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய நேரடியாக அங்கு விசிட் அடித்தோம்.

அனுமன் கோயில் செல்லும் வழி, அயோத்தி
அனுமன் கோயில் செல்லும் வழி, அயோத்தி

தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் பாதுகாப்பு முன்னைவிட பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நிலம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 6 முதல் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜல்பா காலனி பகுதியிலேயே பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடங்கிவிடுகின்றன. அந்தப் பகுதிக்குள் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஜல்பா காலனியை அடுத்து அனுமன் மந்திர் அமைந்திருக்கிறது. அதன்பிறகு நடந்துசெல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

`தலைமை நீதிபதி கோகாய் முதல் நீதிபதி அப்துல் நசீர் வரை..!'- அயோத்தி வழக்கின் அரசியல்சாசன அமர்வு

அந்தப் பகுதியில் கடைவைத்திருப்பவர்கள், கியாஸ் உள்ளிட்டவைகளைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், `இந்தப் பிரச்னை எப்போ முடியும்... எங்களை எப்போது உள்ளே அனுமதிப்பீர்கள்?' என்று கேள்வியெழுப்பவதைக் கேட்க முடிந்தது. அதேநேரம், அவர்கள் வேறு வழியாக கியாஸ் உள்ளிட்டவைகளைக் கொண்டுவந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

அயோத்தி
அயோத்தி

புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. பத்திரிகையாளர் என்பதற்கான அடையாள அட்டையைக் காண்பித்த பின்னர், ஒரு குறிப்பிட்ட இடம்வரை செல்ல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் நமக்கு அனுமதி அளித்தனர். ராமஜென்ம பூமி என்றழைக்கப்படும் இடத்துக்கு முன், ஒரு குறிப்பிட்ட இடம் வரை எல்லோரும் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜல்பா காலனி, அனுமன் மந்திர்..! தீர்ப்புக்குப் பின் அயோத்தி #VikatanInAyodhya

அந்த இடத்தை அடுத்து, கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நம்மால் செல்ல முடிந்தது. அங்கிருந்து பக்தர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை. பக்தராக வேண்டுமானால் செல்லலாம் என்கிறார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார்.

ஜல்பா காலனி, அயோத்தி
ஜல்பா காலனி, அயோத்தி

கேமரா, செல்போன், வாட்ச், பேனா போன்ற எந்தவொரு பொருளையும் உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அருகில் இருக்கும் பொருள்கள் பாதுகாப்புஅறைகளில் அவற்றை வைத்துவிட்டு வந்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி கிடைக்கிறது.

`அயோத்தி தீர்ப்பு; சோம்நாத் கோயில்!' - அறக்கட்டளை பணிகளைத் தொடங்கும் மத்திய அரசு

ராமஜென்ம பூமி என்றழைக்கப்படும் அந்த இடத்தில், சிறிய குன்று போன்ற கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் குன்றுபோன்ற கோயில், சேலை உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதை மக்கள் பக்தியுடன் வணங்கிச் செல்கிறார்கள். உள்ளே செல்வதற்கு முன், 7 முதல் 8 இடங்களில் உள்ள பாதுகாப்பு சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

அயோத்தி
அயோத்தி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தப் பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வரவேற்கின்றனர். `பிரச்னைகள் முடிந்து எப்போது இயல்புநிலை திரும்பும்?' என்பதே அங்கு கடை வைத்திருப்பவர்கள் முதல் சாமான்யர்கள் வரை பெரும்பாலானவர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.