Published:Updated:

`புகார்தாரர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் எஸ்.பி!' - கேரள காவல்துறையின் அதிரடித் திட்டம்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் புகார்தார்களை மாவட்ட எஸ்.பி தொலைபேசியில் தொடர்புகொள்வார். காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும், காவலர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்ததா எனவும் கேட்டு அறிந்துகொள்வார்.

கேரள காவல்துறையில் புதுமைகளைப் புகுத்திவருகிறது பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசு. அதில், சமீபத்தில் மூன்று முக்கிய விஷயங்களை அறிமுகப்படுத்தி கேரள மக்களிடம் பாராட்டைப் பெற்றிருக்கிறது காவல்துறை. வழக்கமாக, எந்த காவல் நிலைய எல்லைப் பகுதிக்குள் குற்றச் சம்பவம் நடக்கிறதோ அங்குதான் புகர் அளிக்க வேண்டும் என்பது விதி. அதிலும், நம்மூர் கவல் நிலையங்களில் காவல்நிலைய எல்லைப் பிரச்னை காரணமாகப் புகார்கள் வாங்க மறுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. ஆனால், கேரளத்தில் இந்த நிலையை மாற்றி, எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் மக்கள் புகார் அளிக்கலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளியூரில் பயணத்தில் இருப்பவர்கள்கூட தங்கள் புகாரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளிக்கலாம். அந்தப் புகார், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இந்த நடைமுறை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருத்து எழுந்தது.

கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா
கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா

இரண்டாவது திட்டமாக, பெண் காவலர் (வுமன் பி.சி) என அழைக்கும் வழக்கத்தை அடியோடு ரத்துசெய்து அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பெண் கவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஆய்வாளர் என அழைக்கப்பட்டுவந்தனர். இது, ஆண் பெண் பேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதால், இந்த நடைமுறை அடியோடு ரத்துசெய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு, பெண்களின் நட்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸை சிவில் போலீஸ் ஆபீஸர் எனவும், பெண் போலீஸ் அதிகாரிகளை சீனியர் சிவில் போலீஸ் ஆபீஸர் எனவும் அழைக்கப்பட வேண்டும் என டிஜிபி லோக்நாத் பெகரா உத்தரவிட்டிருந்தார்.

மூன்றாவது திட்டமாக, புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு காவல் நிலையத்தில் ஏற்படும் அனுபவங்கள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கருத்து கேட்டு அறிந்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா கூறுகையில்,``காவல் நிலையங்களில் புகார் அளிக்கும் புகார்தார்களை மாவட்ட எஸ்பி தொலைபேசியில் தொடர்புகொள்வார். காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும், காவலர்களின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்ததா எனவும் கேட்டு அறிந்துகொள்வார். கேரளத்தின் அனைத்து மாவட்ட எஸ்பி-க்களும், தினமும் மாலை நேரத்தில் மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 10 பேரை போனில் தொடர்புகொண்டு இந்த விபரங்களைக் கேட்டு அறிந்துகொள்வார்கள்.

காவல் நிலையம்
காவல் நிலையம்
மாதிரி படம்

அதுபோன்று, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி மட்டுமல்லாது, டிஜிபி-யும் வெவ்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகர் அளித்த 10 புகார்தாரர்களிடம் தினமும் போனில் பேசுவர்கள். எனவே, புகார்தாரர்கள் மனுவில் தங்கள் மொபைல் எண்ணையும் குறிப்பிட வேண்டும். கவல் நிலையங்கள் சேவை மையங்களாக அறிவிக்கப்பட்ட உடன், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும். இதற்காக, காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் உடனடியாக ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை எனத் தெரியவந்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

`இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மனுதாரர்களுக்கு உரிய மரியாதைக் காவலர்கள் கொடுப்பதுடன், புகார்கள்மீது அக்கறையுடன் நடவடிக்கை எடுப்பார்கள்' என்கிறார்கள், கேரள மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு