Published:Updated:

மும்பை: பழங்குடியினர் நல ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி மரணம்!

ஸ்டான் ஸ்வாமி
ஸ்டான் ஸ்வாமி

புனே பீமா-கோரேகாவ் வன்முறை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி புனேயில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும்விதத்தில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அடுத்த நாள் புனே பீமா-கோரேகாவில் பெரிய அளவில் வன்முறை நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் பீமா-கோரேகாவில் நிறுவப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி மரியாதை செலுத்துவது வழக்கம். 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து, தலித் ராணுவ வீரர்கள் போராடி பெஷாவா படைகளைத் தோற்கடித்ததன் நினைவாக இந்த நினைவுச்சின்னம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு 2018-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நடந்த கலவரம், அதற்கு முந்தைய நாளில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும்விதத்தில் பேசியது பற்றி மாநில போலீஸார் விசாரித்துவந்தனர். பின்னர் இந்த வழக்கை 2018-ம் ஆண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இதில் எல்கர் பரிஷத்துக்கு உதவி செய்ததாகக் கூறிப் பல சமூக ஆர்வலர்களைக் கைதுசெய்தனர்.

பீமா கோரேகாவ் நினைவுச்சின்னம்
பீமா கோரேகாவ் நினைவுச்சின்னம்

அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடியின மக்களின் நலனுக்காகப் பாடுபட்டுவந்த பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியும் ஒருவர். அவரை தேசியப் புலனாய்வு ஏஜென்சி கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் கைதுசெய்து மும்பைக்கு அழைத்து வந்தது. அவரிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல், அவரை நேரடியாக நீதிமன்றக் காவலில் அடைத்தனர். அதிலிருந்து ஸ்வாமியிடம் கடந்த இரண்டு மாதங்களில் பல விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியதோடு அவரது வீட்டில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்தது. மும்பை அருகிலுள்ள தலோஜா சிறையில் சுவாமியும், அவருடன் கைதுசெய்யப்பட்ட மற்றவர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். அடிக்கடி ஸ்டான் ஸ்வாமி தனக்கு உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், ஆனால் அதை சிறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஸ்டான் ஸ்வாமிக்கு நக்சலைட்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் ஒரு நக்சலைட் என்றும் தேசியப் புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் சிறையிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நீதிபதியிடம் ஸ்டான் ஸ்வாமி பேசினார். அப்போது எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால், உடனே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அப்படி விடுதலை செய்யவில்லையெனில் சிறையிலேயே விரைவில் இறந்துவிடுவேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தனியார் மருத்துவனையில் ஸ்டான் ஸ்வாமி சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்குக் கடந்த சில நாள்களாக உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த்து. எனவே, அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோர்ட் அனுமதித்தது. கடந்த இரண்டு நாள்களாக அவருக்குச் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுவந்தது. திங்கள்கிழமை சிகிச்சை பலனலிக்காமல் ஸ்டான் ஸ்வாமி காலமானார். இந்தத் தகவல் மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 84. வரும் 6-ம் தேதி ஸ்டான் ஸ்வாமியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிவாசி மக்களுக்காகப் பாடுபட்ட ஸ்டான் ஸ்வாமியை நக்சலைட் என்று கூறி சிறையில் அடைத்தனர் என மக்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துவ்ருகின்றனர். அவர் ஜாமீனில் வெளி வர முடியாதபடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு சமூக அமைப்புகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. சிறையில் ஸ்டான் ஸ்வாமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து மனித உரிமை கமிஷன் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது. பீமா-கோரேகாவ் கலவரம் தொடர்பாக 16 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஆந்திர எழுத்தாளர் வரவரராவ்-ம் என்பவரும் அடக்கம்.

அடுத்த கட்டுரைக்கு