Published:Updated:

`சாலையில் இறந்துகிடந்த நாய்.. பசியால் தவித்த தொழிலாளி' - அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான் சம்பவம்

தொழிலாளி
தொழிலாளி

ஊரடங்கால் அதிகரித்துள்ள பசிக் கொடுமை காரணமாகச் சாலையில் இறந்துகிடந்த நாயின் இறைச்சியை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஒரு தொழிலாளி.

`கொரோனா’ - கண்ணுக்குத் தெரியாத இந்த மிகச் சிறிய வைரஸ் சர்வதேச அளவில் மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை, உணவு என அனைத்தையும் கடுமையாகப் பாதித்துவிட்டது. அதுவும் கடந்த இரண்டு மாதங்களில் இந்த மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களையும்தாண்டி அதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களே மிக அதிகம்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு
AP

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் உணவு இல்லாமலும் கொரோனா பயத்தினாலும் பல ஆயிரம் கி.மீட்டர்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குப் பயணப்படுகின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் சந்திக்கும் பிரச்னைகளும் விபத்துகளும் ஏராளம். பசி, பயம், விபத்து போன்ற காரணங்களாலும் ஏராளமான மக்கள் தினம்தினம் உயிரிழந்து வருகின்றனர்.

`ஊரடங்கு நீடித்தால் கொரோனா இறப்பைவிட பசி இறப்பு அதிகமாகிவிடும்!’ - இன்ஃபோசிஸ் நிறுவனர் எச்சரிக்கை

இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை மற்றும் தினக்கூலிகளின் ஒரே பிரச்னையாக இருப்பது பசி மட்டும்தான். இப்படிப் பசியினால் இறந்த நாயின் இறைச்சியை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு தொழிலாளி. பிரதுமன் சிங் நருகா (Pradhuman Singh Naruka) என்பவர் கடந்த 18-ம் தேதி தான் சாலையில் கண்ட ஒரு காட்சியை வீடியோவாக எடுத்து அதை தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Photo: AP

ராஜஸ்தானின் ஜெய்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் பிரதுமன் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஷாஹ்புரா பகுதியில் சாலையில் இறந்து கிடந்த ஒரு நாயின் கறியை ஒரு தொழிலாளி உண்பதைப் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, `அதைச் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் இறந்துவிடுவாய்' என அந்த மனிதரை நோக்கிக் கூச்சலிட்டுவிட்டு, தான் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் அந்தத் தொழிலாளிக்குக் கொடுத்து உதவியுள்ளார்.

இது தொடர்பாக பிரதுமன் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில், `` பசிக் கொடுமையால் தொழிலாளி ஒருவர் இறந்த நாய்க் கறியைச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஷாஹ்புராவில் மனிதம் இறந்துவிட்டது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அந்த வழியாகச் சென்ற யாரும் வாகனத்தை நிறுத்தி அந்த நபருக்கு உதவவில்லை. என்னால் முடிந்தது, அவரை எச்சரித்து உணவும் தண்ணீரும் கொடுத்ததுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

`இறந்த உடல்களுடன் திறந்த ட்ரக்கில் பயணித்த தொழிலாளர்கள்’ - அதிர்ச்சி கொடுத்த உ.பி சம்பவம்

கடந்த சில நாள்களாக இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தொழிலாளியின் இந்த நிலைக்கு காரணம் அரசுதான் என்றும் அவரின் நிலை கண்டு வருந்துவதாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தான் நேரில் பார்த்த சம்பவத்தைப் பற்றி தி வீக் ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார் பிரதுமன். ``நான் பார்த்த அந்த நபருக்கு நிச்சயமாக வீடு இல்லை என்று நினைக்கிறேன். மே 18-ம் தேதி பிற்பகல் கொளுத்தும் வெயிலில் அந்த மனிதர் சாலையில் அமர்ந்திருந்தார். நான் அவரை சாலையின் ஓரம் அழைத்து வந்து உட்கார வைத்தேன்.

தொழிலாளி
தொழிலாளி

அன்றைய தினமே இந்த வீடியோவை நான் வெளியிட்டேன், மறுநாள் காவல்துறையினரும் அதிகாரிகளும் என்னை போனில் தொடர்புகொண்டு அந்தத் தொழிலாளியைப் பற்றியும் அவர் இருந்த இடம் தொடர்பாகவும் விசாரித்தனர்” எனக் கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் புலம்பெயரும் தொழிலாளர்கள் உயிரிழப்பது மட்டுமல்லாமல் இதுபோன்ற பல வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாள்களில் மட்டும் நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது வேதனையானது.

அடுத்த கட்டுரைக்கு