Published:Updated:

`திருடுபோன 800 ஆடுகள்; எல்லையில் வேலி அமைப்பு' - சீன ராணுவத்தினர் 300 பேரை இந்திய ராணுவம் கொன்ற கதை

இந்தியா - சீனா போர்

1967-ல் 300-க்கும் அதிகமான சீன ராணுவத்தினரைக் கொன்ற இந்திய ராணுவம்... என்ன நடந்தது?! #IndependenceDay

`திருடுபோன 800 ஆடுகள்; எல்லையில் வேலி அமைப்பு' - சீன ராணுவத்தினர் 300 பேரை இந்திய ராணுவம் கொன்ற கதை

1967-ல் 300-க்கும் அதிகமான சீன ராணுவத்தினரைக் கொன்ற இந்திய ராணுவம்... என்ன நடந்தது?! #IndependenceDay

Published:Updated:
இந்தியா - சீனா போர்

இந்தியா சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 75 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளை இந்தியா சந்தித்திருக்கிறது. அதில், 1967-ல் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலும் ஒன்று. இந்த மோதலில் 300 சீன ராணுவத்தினரும், 88 இந்திய ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ஏன் இந்த மோதல் உண்டானது... என்ன நடந்தது? - திரும்பிப் பார்ப்போம்!

சுதந்திர தினம்
சுதந்திர தினம்

காணாமல் போன 800 ஆடுகள்?

1962 இந்தியா - சீனா போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ஒருவித பதற்றம் நீடித்துக் கொண்டே இருந்தது. ஏதாவது ஒரு விஷயத்தில் இரு நாடுகளும் மோதிக்கொண்டே இருந்தன. 1965-ம் ஆண்டு இந்தியாமீது ஒரு விநோதக் குற்றச்சாட்டை முன்வைத்தது சீனா. `எங்கள் நாட்டு எல்லையில் மேய்ந்துகொண்டிருந்த 800 ஆடுகளை இந்திய ராணுவத்தினர் திருடிவிட்டனர்' என்று குண்டைத் தூக்கிப்போட்டது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து சீனத் தூதரகம் முன்பு, அப்போதைய எதிர்க்கட்சியான ஜன சங்கம் ஆடுகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்துக்கு அடல் பிகாரி வாஜ்பாய்தான் தலைமை தாங்கினார். தொடர்ந்து, 1965-ல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரிலும் சீனா, இந்தியாவுக்கு மறைமுகமாகப் பல அழுத்தங்களைக் கொடுத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றி வளைக்கப்பட்ட தூதரகங்கள்!

1962 போருக்குப் பின்னர், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களது தூதர்களைத் திருப்பி அழைத்துக்கொண்டன. இருந்தும், இரு நாடுகளிலும் இருக்கும் தூதரக அலுவலகங்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 1967 ஜூன் மாதத்தில், `இந்தியத் தூதரகத்திலுள்ள அதிகாரிகள் எங்கள் நாட்டை உளவு பார்க்கின்றனர்' என்று குற்றம்சாட்டியது சீனா. அதோடு நிறுத்திக்கொள்ளாமல், தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சீனக் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். மேலும், வேவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ரகுநாத், விஜய் ஆகிய இரண்டு இந்தியத் தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது சீன நீதிமன்றம். ஜூன் 14 அன்று, ரகுநாத்தும், விஜய்யும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, அங்கு கூடியிருந்த சீனர்கள் அவர்களைப் பலமாகத் தாக்கினார். இந்தச் சம்பவம் இந்தியாவில் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியிலுள்ள சீனத் தூதரகத்தைச் சுற்றி வளைத்து இந்தியாவிலுள்ள முக்கியக் கட்சிகள் போராட்டம் நடத்தின. குறிப்பாக, எதிர்க்கட்சியான ஜன சங்கம் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தது. அரசியல் கட்சிகள் தவிர பல தரப்பட்ட மக்களும் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின்போது சீனத் தூதரகம் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் போர் ஏற்படும் சூழலை உருவாக்கியது.

வேலி அமைப்பும்... துப்பாக்கிச்சூடும்!

ஒருபுறம் இப்படியாக அடுத்தடுத்து பிரச்னைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடும் இரு நாட்டு வீரர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். இதனால் எல்லையில் இரும்பு வேலிகள் அமைக்கத் திட்டமிட்டது மத்திய அரசு. 1967, ஆகஸ்ட் 20 அன்று, இரும்பு வேலி அமைக்கும் பணிகள் தொடங்கின. பலத்த பாதுகாப்புடன் இரும்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆரம்பம் முதலே இந்த வேலி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சீன ராணுவம், செப்டம்பர் 11-ம் தேதி இந்தியாவின் சிக்கிம் எல்லையை நோக்கி முன்னேறி வந்தது. இதனால் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சீனப் படைத் தளபதி ரென் ராங் (Ren Rong), `வேலி அமைக்கும் பணிகளை உடனே நிறுத்துங்கள்' என்று இந்தியாவின் ராணுவ ஜெனரல் ராய் சிங்கிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், பணிகளை நிறுத்த மறுப்புத் தெரிவித்தார் ராய் சிங். தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற, ஒரு கட்டத்தில் திரும்பிச் சென்றது சீனப் படை.

இதைத் தொடர்ந்து மீண்டும் வேலி அமைக்கும் பணியைத் தொடங்கியது இந்திய ராணுவம். அப்போது சீனப் பகுதியிலிருந்து ஒரு விசில் சத்தம் கேட்க, அங்கிருந்த பங்கர்களிலிருந்து சரமாரியாகச் சுடத் தொடங்கியிருக்கிறார்கள் சீன ராணுவத்தினர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத இந்திய ராணுவத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால், முதலில் இந்தியத் தரப்பில் அதிக மரணங்கள் ஏற்பட்டன. பின்னர், சுதாரித்துக் கொண்ட இந்தியப்படை பதில் தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

மூன்று நாள்கள் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில், இந்திய ராணுவத்தின் கைகளே ஓங்கியிருந்தன. மலைப் பகுதியின் மேற்புறத்திலிருந்து தாக்குதலில் ஈடுபட்டதால், 300-க்கும் அதிகமான சீன ராணுவத்தினரைக் கொன்றது இந்தியப்படை. தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் காரணமாக இந்தத் தாக்குதல்கள் முடித்துக் கொள்ளப்பட்டன.

``1962-ம் ஆண்டு நடைபெற்ற போரில் சீனாவின் கைகளே ஓங்கியிருந்தன. இதனால், `சீனாவுடன் சண்டையிட்டு இந்தியாவால் வெல்ல முடியாது' என்ற கருத்து நிலவிவந்தது. இதன் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் மனதளவில் சற்று பாதிப்படைந்திருந்தனர். 1967-ல் நடந்த இந்த மோதலில், இந்திய ராணுவம் சிறப்பாகச் செயல்பட்டது. இது வீரர்களுக்கு தையரித்தை கொடுத்தது. இந்தியாவால் சீனாவை வெல்ல முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எனவே இந்திய ராணுவ வரலாற்றில், இது ஒரு முக்கியச் சம்பவமாகப் பார்க்கப்படுகிறது'' என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.