Published:Updated:

`ஷேடோ’-வைத் தேடிவரும் ஆன்லைன் உணவு...! - கேரளாவில் கவனம் ஈர்த்த தெருநாய்

தெருநாய்க்குத் தினமும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து தந்து அசத்துகிறார், கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ்.

Dog - File Photo
Dog - File Photo

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கௌதியார் (Kowdiar) என்ற நகரில் வசித்துவருகிறது ’ஷேடோ’ என்ற தெருநாய். இந்த நாய்க்கு, தினமும் பிற்பகலில் ஆன்லைனில் உணவு வருகிறது. ஒரு அப்பார்ட்மென்ட் காவலர், உணவு பார்சலைத் திறந்து வைத்தால், ஷேடோ அதை சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடும்.

Online food delivery
Online food delivery

இந்த நாய்க்கு தினமும் உணவு ஆர்டர் செய்பவர், வர்கீஸ் ஓம்மன். சுற்றுலா ஏற்பாடு வேலையைச் செய்துவரும் இவர், அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்துவருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, இவர் ஷேடோவைத் தன் குடியிருப்புக்குக் கொண்டுவந்துள்ளார். அப்போதிலிருந்து தினமும் அந்த நாய்க்கு உணவு, இறைச்சி ஆகியவற்றை வாங்கித் தந்து பாதுகாப்பாக வளர்த்துவந்துள்ளார்.

அதேநேரம், சுற்றுலா தொடர்பான விஷயங்களுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தால், நாய் ஷேடோவுக்கு உணவு வழங்க முடியாமல் போயுள்ளது. இதை நினைத்து வருந்திய வர்கீஸ், இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என யோசித்து, ஆன்லைன் உணவு டெலிவரி முறையைக் கையில் எடுத்துள்ளார். வர்கீஸ் எப்போதெல்லாம் வெளியில் செல்கிறாரோ அப்போதெல்லாம், ஷேடோவுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துவிடுகிறார்.

Food
Food

“நான் வெளியில் செல்லும்போது, என் குடும்பத்தினர் ஷேடோவுக்கு உணவு வழங்குவர். ஆனால், யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஷேடோவுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என வருத்தமாக இருந்தது. அதனால் ஆன்லைனில் ஷேடோ பெயரில் ஒரு கணக்கு தொடங்கி, அதில் உணவு ஆர்டர் செய்துவருகிறேன். உணவை எடுத்ததும் டெலிவரி பாய் எனக்கு போன் செய்வார். அவருக்கு, ஷேடோ எங்கு இருக்கும் எனக் கூறி விடுவேன். அவர் அங்கு சென்று உணவைத் தந்துவிடுவார்” என்று வர்கீஸ் கூறியுள்ளார்.

`பாகிஸ்தானுக்கு பதிலளித்துவிட்டார்!’ - `குளோபல் கோல்கீப்பர்’ மோடியைப் புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்

வர்கீஸின் அபார்ட்மென்ட்டில் வேலை செய்யும் ராதாகிருஷ்ணன் என்ற காவலர், டெலிவரி பாய் கொண்டுவரும் பார்சலைப் பிரித்து ஷேடோவுக்குத் தருவார். அது, உணவை சாப்பிட்டுவிட்டுச் சென்று விடும். “ ஷேடோவுக்கு வர்கீஸ் சார்தான் உணவு தருவார். அவ்வப்போது, நான் கொண்டுவரும் மதிய உணவையும் தருவேன். ஷேடோ, அனைவரிடமும் அன்பாகப் பழகும். அதுவும் வர்கீஸ் சார் எங்கு சென்றாலும் அவர் பின்னாலே செல்வதால், அதற்கு ‘ ஷேடோ’ எனப் பெயர் வைத்துவிட்டார். ஷேடோவுக்கு பீஃப் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் தேவைப்பட்டால், வித்தியாசமான முறையில் கத்தும். அதைப் புரிந்துகொண்டு நானே தண்ணீர் கொண்டு வந்து தருவேன்” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Dog - File photo
Dog - File photo

’இரண்டு வருடங்களுக்கு முன், கேரளாவில் பெய்த மழையில் சிக்கி, சாலையின் ஓரத்தில் குட்டிநாய் தவித்துக்கொண்டிருந்துள்ளது. அதைப் பார்த்த என் மகன்கள் ஜோஸ்வா மற்றும் ஜாகோப் ஆகிய இருவரும், நாயை மீட்டு எங்கள் பகுதிக்குக் கொண்டுவந்தனர். நாங்கள் இருக்கும் அபார்ட்மென்ட்டில் நாய்கள் வளர்க்க அனுமதி இல்லை என்பதால், அதை என் அபார்ட்மென்ட்டுக்கு அருகிலேயே வைத்து வளர்த்துவருகிறோம். அன்று காப்பாற்றிக் கொண்டு வரப்பட்டதுதான், ஷேடோ” என்று கூறி நெகிழ்கிறார் வர்கீஸ்.

News Credits : Times of India