Published:Updated:

பெயரோ சத்துணவு; வழங்கப்படுவதோ ரொட்டி, உப்பு! - இது உத்தரப்பிரதேச அவலம்

சத்யா கோபாலன்

சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

UP Students
UP Students ( ANI )

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

UP Mid day meal
UP Mid day meal
ANI

பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்குச் சத்தான உணவு வழங்குதல், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுத்து கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுத்தல் போன்றவைதான் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் வழங்கப்பட்ட உணவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு உத்தரப்பிரதேசம், மிர்ஸாபூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்களுக்கு ரொட்டியும், உப்பும் மதியவேளை சத்துணவாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில், `பல மாணவர்கள் பள்ளியின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ரொட்டியை உப்பில் தொட்டு மிகவும் சாதாரணமாக உண்கின்றனர்’

UP mid day meal
UP mid day meal
ANI

உத்தரப்பிரதேச மதியவேளை சத்துணவுத் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்குச் சாதம், ரொட்டி, காய்கறிகள், பழங்கள், பால் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு வழங்கும் ஒரு நாள் உணவில் குறைந்தது 450 கலோரிகளும், குறைந்தது 12 கிராம் புரோட்டீன்களும் இருக்க வேண்டும் என்பது விதி.

Vikatan

``இந்தப் பள்ளியில் நடக்கும் சம்பவங்கள் மிக மோசமானவை. பெரும்பாலும் மாணவர்களுக்கு ரொட்டியுடன் உப்பு வழங்கப்படும் அல்லது சாதத்துடன் உப்பு வழங்கப்படும். ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டுமே பால் வழங்கப்படும். அதைத் தவிர வேறு எந்தப் பொருள்களும் வழங்கப்படுவதில்லை. வாழைப்பழம், முட்டை போன்றவைகூட வழங்கப்படுவதில்லை. கடந்த சில வருடங்களாகவே இதே நிலைதான் தொடர்கிறது” எனப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Anurag Patel
Anurag Patel
ANI

இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள உத்தரப்பிரதேச அரசு அதிகாரி அனுரங் படேல், ``இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடந்தது. அதில் மாணவர்களுக்கு ரொட்டி, உப்பு வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பள்ளி ஆசிரியர் மற்றும் சத்துணவுக்காக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளரின் தவறு. அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

சத்துணவு தொடர்பாகக் கடந்த வருடம் உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் உள்ள 1.5 லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் ஒரு கோடி மாணவ, மாணவிகள் வரை பயன்பெறுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.