Published:Updated:

`9 மாதங்கள்; 90 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!' - ஆளும்கட்சியைப் பதறவைத்த கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

Renu Raj
Renu Raj ( twitter )

டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும் சப் கலெக்டர் பதவியில் இருந்த தனது கடைசி நாளிலும் அதிரடி காட்டியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு.

தமிழகத்தின் எல்லையான மூணாறின் அழகை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். அதன் அழகையும் ரசித்திருப்போம். ரம்மியம் கொஞ்சும் அந்த மலைத்தொடர்கள் சமீப காலமாக சில ஆபத்துகளை சந்தித்து வருகிறது. அந்த ஆபத்துகளும் அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் சந்தித்து வரும் நெருக்கடியும்தான் கேரளாவின் தற்போதைய `ஹாட் டாப்பிக்'காக உள்ளது.

மூணாறு
மூணாறு
twitter

மூணாறிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவிகுளம். தேவிகுளம் தாலுகா சப் கலெக்டராக இருப்பர் ரேணு ராஜ். 9 மாதங்களுக்கு முன்புதான் இங்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்ட இவர், சமீபத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். இவரின் டிரான்ஸ்ஃபர் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதற்குக் காரணம்... அவர் எடுத்த நடவடிக்கைகள்தான். இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இந்த ரேணு ராஜ், 9 மாதங்களுக்கு முன்பு பணிக்கு வந்திருந்தாலும் தனது பணிக்காலத்தில் மூணாறு, தேவிகுளம் பகுதியின் தலையாய பிரச்னையாக இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களைக் களையெடுத்தார். அது யாருடைய கட்டடங்கள் என்பதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.

``நான் செய்தால் மக்களும் செய்ய முன்வருவார்கள்!’’ - காய்கறி வாங்க 10 கி.மீ நடக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி

விதிகளை மீறி கட்டியதாகத் தெரிந்தால் அவற்றின் மீது நடவடிக்கை உறுதி என்கிற வகையில் செயல்பட்டுவந்தார். பதவியேற்ற 9 மாதங்களில் இதுவரை 90-க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு. அதேபோல் விதியை மீறி செயல்பட்டுவந்த கல் குவாரிகளை மூடியவர், 40-க்கும் அதிகமாகக் கட்டப்பட்டு வரும் விதிமீறிய கட்டடங்களை உடனடியாக நிறுத்த ஆணையிட்டுள்ளார். மூணாறில் ஓடும் முத்திரா ஆற்றின் கரையோரத்தில் புதிதாக பஞ்சாயத்து சார்பில் அரசு கட்டடம் கட்டப்பட்டுவந்தது.

Renu Raj
Renu Raj
twitter

ஆனால், இந்தக் கட்டடம் நதிக்கரை பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமாகக் கட்டப்பட்டு வருவதை அறிந்து ரேணு உடனடியாக அதை நிறுத்த உத்தரவிட்டார். இப்படி பல விதிமீறல்கள், முறைகேடாக நிலம் வாங்கியவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுத்தபோது டிரான்ஸ்ஃபர் செய்யப்படாத ரேணு, கடந்த மாதம் கேரளாவை ஆளும் இடதுசாரி கட்சியின் பிரமுகரும் இடுக்கி தொகுதி முன்னாள் எம்.பி-யுமான ஜாய்ஸ் ஜார்ஜ் மற்றும் அவரின் குடும்பத்தினர் 20 ஏக்கர் நிலம் முறைகேடாகப் பட்டா செய்துள்ளதாகக் கூறி அந்தப் பட்டாவை ரத்து செய்தார். அப்போது இருந்தே அவருக்கும் அரசுக்குமான மோதல் தொடங்கிவிட்டது.

அன்று ஹீரோ... இன்று வில்லன்... `குடி'யால் ஒரே நாளில் சரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

இதற்கிடையே இந்த விவகாரங்களை மையமாக வைத்து தேவிகுளம் சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ ராஜேந்திரன், அதிகாரி ரேணு ராஜ் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். ``உங்களிடம் `I.A.S’ என்ற மூன்று எழுத்துகள் இருந்தால், உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம். இந்த மாதிரியான ஆட்கள் கலெக்டராக வேண்டும் எனப் படிக்கிறார்களே தவிர அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை'' என்று ஒருகட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு ராஜை வசைபாடினார்.

Renu Raj
Renu Raj
twitter

இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தும் விடாத எம்.எல்.ஏ ராஜேந்திரன், பஞ்சாயத்து ஆபீஸ் கட்டடத்துக்கு தடை விதித்தது சட்டப்படி குற்றம் எனக் கூறி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீதிமன்றமோ, ``ரேணு எடுத்த நடவடிக்கை சரியே. ஆற்றின் கரையோரத்திலா அரசு கட்டடம் கட்டுவீர்கள்?'' என அரசைக் கண்டித்தது.

இதன்பிறகே, ஆளும் சி.பி.எம் அரசு அவரை இங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்ததுடன் தற்போது பொது நிர்வாகத்துறையின் செயலாளராக மாற்றம் செய்துள்ளது. டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டாலும் சப் கலெக்டர் பதவியில் இருந்த தனது கடைசி நாளிலும் அதிரடி காட்டியுள்ளார் ரேணு. 1999-ல் முறைகேடாக வாங்கப்பட்ட 2.5 ஏக்கர் கொண்ட நான்கு நிலங்களின் பட்டாக்களை அதிரடியாக ரத்து செய்துள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வரும் அதேநேரம் இவரது டிரான்ஸ்ஃபரை எதிர்த்து கேரள கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

Renu Raj
Renu Raj
twitter

இதுதொடர்பாகப் பேசியுள்ள அந்தப் பகுதி அதிகாரி ஒருவர், ``தேவிகுளம், மூணாறு பகுதியின் முக்கியப் பிரச்னையே ஆக்கிரமிப்புதான். காடுகளைத் தங்கள் இஷ்டத்துக்கு இங்குள்ள லேண்ட் மாஃபியாக்கள் ஆக்கிமிப்பு செய்துள்ளார்கள். இவற்றை மீட்டெடுக்கவே ஐ.ஏ.எஸ் அதிகாரி ரேணு ராஜ் உழைத்தார். முறைகேடாக வாங்கிய நிலங்களைக் கண்டறிய வருவாய்த் துறையுடன் சேர்ந்து தனி டீம் அமைத்து அவற்றைக் களையெடுத்து வந்தார்'' எனக் கூறியுள்ளார்.

``நில அபகரிப்பு என்பது இந்த மலை வாசஸ்தலத்தை முடக்கும் புற்றுநோய். அதனாலேயே இந்த நடவடிக்கைகளைத் தைரியமாக எடுத்தேன். இதுவரை 9 மாதங்களில் 90 ஆக்கிரமிப்புகளை வெளியேற்றியுள்ளேன். நான் பணிபுரிந்தபோது ஒருநாளைக்கூட வீணாக்கவில்லை எனப் பெருமையாகக் கூறுவேன்" என நேர்மையாகப் பேசும் ரேணு ராஜ், 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றிபெற்றவர் மட்டுமல்ல ஒரு டாக்டரும்கூட.

Vikatan

தொடர் கதையாகும் டிரான்ஸ்ஃபர்!

இப்போது மட்டும் தேவிகுளம் இந்தப் பிரச்னையை புதிதாக எதிர்கொள்ளவில்லை. இதற்கு முன்பும் இருந்த சப்-கலெக்டர்கள் இதே பிரச்னையால் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 வருடங்களில் தேவிகுளம் சப் கலெக்டர் பதவியிலிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் 16வது ஐ.ஏ.எஸ் அதிகாரி இந்த ரேணு ராஜ். சி.பி.எம் ஆட்சிக்கு வந்த 2016-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால் இவர் 5-வது நபர். இதுவே இந்தப் பிரச்னைக்கு ஒரு சிறிய உதாரணம் எனலாம். பத்திரிகையாளரை கார் ஏற்றி விபத்துக்குள்ளான வழக்கில் சிறைக் கம்பிகளை எண்ணிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மட்டுமே இந்த தேவிகுளத்தில் ஒருவருடம் பணிபுரிந்த சப்-கலெக்டர்.

Renu Raj
Renu Raj
twitter

இதில் மற்றுமொரு கூத்தாக என்டிஎல் ரெட்டி எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இங்கு ஒரு மாதம் மட்டுமே சப்-கலெக்டராக இருந்துள்ளார். மலை சுற்றுலாத்தலமான இங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபவர்களில் கட்சிப் பாகுபாடே கிடையாது. ஆட்சிக்கு காங்கிரஸ் வந்தாலும் சரி, சி.பி.எம் வந்தாலும் சரி இவர்கள் மீது பெயரளவில் மட்டுமே நடவடிக்கை இருக்கும் என்கின்றன கேரள ஊடகங்கள். கடைசியாக அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது மிகப்பெரிய அளவில் இங்கிருந்த நில ஆக்கிரமிப்பு மாஃபியாக்கள் மீது கடும் நடவடிக்கை பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு