Published:Updated:

சிலிண்டர் வெடித்து தீ விபத்து! - சூடான் ஆலையில் தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் பலி

சூடானில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து
தீ விபத்து

சூடான் தலைநகர் கார்டோமில் சலூமி செராமிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிவந்தனர். இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சூடான் அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 23 நபர்களில் 18 பேர் இந்தியர்கள் எனக் கூறப்படுகிறது.

சூடான்
சூடான்

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது ட்விட்டர் பதிவில், ``சூடானின் பஹ்ரி பகுதியில் உள்ள சலூமி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பான சோகமான செய்தி இப்போது வந்துள்ளது. இதில் இந்திய தொழிலாளர்கள் சிலர் உயிரிழந்துவிட்டார்கள். இன்னும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். வெளியுறவுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளனர். +249- 921917471 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக தகவல்களை சமூகவலைதளத்தில் தொடர்ந்து வெளியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

`இந்தியா இன் சூடான்' என்ற வெளியுறவுத் துறையின் ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அதில், ``விபத்து நடந்த தொழிற்சாலையில் 50 இந்திய தொழிலாளர்கள் பணியாற்றிவந்துள்ளனர். இதில் 18 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அவர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் பக்கத்தில் இந்த விபத்தில் காணாமல் போன இந்தியர்களின் விவரங்கள் மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்குமார், ராஜஸ்தானைச் சேர்ந்த ரவீந்தர் சிங், பீகாரைச் சேர்ந்த நீரஞ் குமார் ஆகியோர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பூபாலன், முகமது சலீம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சோனு பிரசாத், ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேந்தர் குமார் ஆகியோர் ஜெனரல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போனவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்களின் பெயர்களும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராம கிருஷ்ணன், ராஜ் சேகர், வெங்கடாசலம் உட்பட இந்தியர்கள் 16 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.