Published:Updated:

தஞ்சாவூருக்கு வந்த சுகோய் போர்விமானம்... கோவையில் தேஜோஸ்... பரபர விமானப்படை!

வயிற்றுப் பகுதியில் பிரமோஸ் ஏவுகணையுடன் சுகோய் -30
வயிற்றுப் பகுதியில் பிரமோஸ் ஏவுகணையுடன் சுகோய் -30

கோவையை அடுத்து தஞ்சை விமானப்படைத் தளம் மேம்படுத்தப்பட்டு தற்போது சுகோய் விமானங்கள் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

பிரகதீஸ்வரர் கோயில், ஸ்வார்ட்ஸ் கிறிஸ்துவ ஆலயம், புகழ்பெற்ற சரஸ்வதி மகாலுக்கு அடுத்தபடியாக சுகோய் போர் விமானங்களுக்கு தாய்வீடாகியுள்ளது தஞ்சை மண். சோழர்கள் கடல் கடந்து, பல நாடுகளை வென்றதுபோல, இனிமேல் 'தஞ்சை வாரியர்ஸ்' எனப் பெயர் கொண்ட விமானப்படைத் தளம் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது. சோழர் காலத்தில் தென்னிந்தியாவுக்கே தஞ்சைதான் தலைநகராக இருந்தது. உறையூரில் இருந்த சோழர்கள் தலைநகரை முதலாம் ராஜராஜன் தஞ்சைக்கு மாற்றினார். அப்போதிலிருந்தே ராணுவ முக்கியத்துவம் பெற்ற மையமாக மாறியது தஞ்சை. போர்க்கலையில் வல்லமை மிக்க லட்சக்கணக்கான வீரர்கள் வாழ்ந்த மண் அது. தஞ்சையின் பழங்கால ராணுவ முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு 1940-ம் ஆண்டு இங்கே விமானப்படை தளம் அமைக்கப்பட்டது. 'தஞ்சை வாரியர்ஸ் 'எனவும் 'சதர்ன் ஸ்ட்ரைக்கர்ஸ் 'என்றும் இந்தத் தளம் அழைக்கப்பட்டது.

சுகோய் போர் விமானம்
சுகோய் போர் விமானம்

தொடக்க காலத்தில் சாரங்க்ஸ், ஹாக்ஸ் ரக போர் விமானங்களைத் தஞ்சை வாரியர்ஸ் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தஞ்சை விமானத்தளமே செயல்படாமல் முடங்கிப் போனது. 2013-ம் ஆண்டு ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி தஞ்சை விமானப்படை தளத்தை மேம்படுத்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, அம்பலா உள்ளிட்ட பல நகரங்களில் செயல்பட்டு வந்த 'டைகர்ஷார்க்' 222 ஸ்குவாட்ரன் ஏர் ஸ்டேஷனாக இந்த விமானப்படைத் தளம் மாற்றப்பட்டது.

இங்கிருந்து சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானங்களை இயக்குவதற்காக நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் முடிந்ததையடுத்து, தென்னிந்தியாவின் முதல் சுகோய் விமானப்படைத் தளமாக 'தஞ்சை வாரியார்ஸ் ' நேற்று அறிவிக்கப்பட்டது. முதலில் 8 சுகோய் ரக விமானங்கள் தஞ்சை வாரியர்ஸ் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை இன்ஜின் மற்றும் இரண்டு பைலட்டுகள் கொண்ட போர் விமானம் இது. இந்த விமானங்களிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவு சென்று துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் ரக ஏவுகணைகளை ஏவலாம் என்பது கூடுதல் பலம். இந்தியாவிலேயே பிரமோஸ் ஏவும் சுகோய் விமானங்களைப் பெற்ற முதல் விமானப்படைத் தளம் தஞ்சைதான்.

தஞ்சை விமானப்படையில் இந்த வருட இறுதிக்குள் 18 சுகோய் விமானங்கள் சேர்க்கப்படும். முன்னதாக, இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மட்டுமே சுகோய் விமானப்படைத் தளங்கள் செயல்பட்டு வந்தன. சுகோய் விமானங்களுக்கு புனா, ஜோத்பூர், சிர்ஸா, ரபேரேலி உள்ளிட்ட 11 விமானப்படைத் தளங்கள் உள்ளன. இந்திய விமானப்படையைப் பொறுத்தவரை, ரஃபேல் விமானங்கள் இணைக்கப்படும் வரை சுகோய் மற்றும் மிராஜ்-2000 ரக விமானங்கள்தான் நமது முக்கிய போர் விமானங்கள். சுகோய் நான்காம் தலைமுறை விமானம். ரஷ்யாவிலிருந்து 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 272 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை 260 விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பிரமோஸ் ஏவுகணை
பிரமோஸ் ஏவுகணை

இதில், ரஷ்யாவிடம் லைசென்ஸ் பெற்று நமது ஹெச்.ஏ.எல் நிறுவனமே 222 சுகோய் ரக விமானங்களைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரக விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பப்பட்டால் 1,500 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள சூப்பர்ஸானிக் ஏவுகணையான பிரமோஸ், ஒளியைவிட 2.8 மேக் வேகத்தில் சென்று தாக்கக் கூடியது. இந்த ஏவுகணையை தரை, கடல், வானத்தில் இருந்து ஏவ முடியும். பிரமோஸ் ஏவுகணை ரஷ்ய- இந்திய கூட்டுத் தயாரிப்பு. சுமார் ரூ.30,000 கோடி செலவில் முப்படைகளுக்கும் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்படவுள்ளது. ஒளியைவிட 5 முதல் 7 மேக் வேகத்தில், செல்லக்கூடிய ஹைபர்சானிக் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் திட்டமும் உள்ளது.

தென்னிந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில், தஞ்சை வாரியர்ஸ் வலுவான விமானப்படைத் தளமாக மாற்றப்பட்டுள்ளது. தஞ்சை விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான தலைமைத் தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தலைமைத் தளபதி பதோரியா, விமானப்படை அதிகாரிகள் அதுல்குமார் ஜெயின், அமித் திவாரி,பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறைச் செயலாளர் ஜி.சதீஷ்ரெட்டி, இந்துஸ்தான் ஏரேநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மாதவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி
ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி

தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, சூரிய கிரன் விமானங்களின் போர் கண்கவர் வான்வெளி சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பொதுமக்கள் இதை உற்சாகமாகக் கண்டுகளித்தனர். சுகோய் 30 - ரக போர் விமானம், விமானப்படைத் தளத்தில் முதன்முதலாகத் தரையிறங்கியபோது, பாராம்பர்ய முறைப்படி, இரு பக்கமும் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுகோய் போர் விமானங்கள் இணைப்பு குறித்து பிபின் ராவத் கூறுகையில், ''முப்படைகளுடன் இந்தப் படைப்பிரிவை இணைப்பதால், எதிர்காலத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். பாதுகாப்புத் துறையில் இது மிகப்பெரிய மாற்றமாகும். பிரமோஸ் ஏவுகணை விமானத்தில் பொருத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். பல ஆண்டுகளாக இந்த முயற்சி நடைபெற்று, தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது

இந்தியப் பெருங்கடல் அருகில் உள்ளதால், தஞ்சாவூர் விமானப்படைத் தளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன நாடு இந்தியப் பெருங்கடலில் தனது படை பலத்தை நிறுவுவதற்கும், தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பில்லை. இருந்தாலும் நமது படைப்பிரிவை நாம் தரம் உயர்த்தியாக வேண்டும். தஞ்சாவூரில் இந்தப் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அதிகளவிலான வீரர்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டு படை விரிவு படுத்தப்படும். பாகிஸ்தானுடன் தற்போதைய சூழலில் போர் வர வாய்ப்பில்லை, இருந்தாலும் நம்முடைய படையை நாம் எப்போதும் தயார்நிலையிலேயே வைத்துள்ளோம்'' என்றார்.

நிகழ்ச்சியில் பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள்
நிகழ்ச்சியில் பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள்

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானங்கள் கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில் நிலைகொண்டுள்ளன. இந்தப் படைப் பிரிவுக்கு 'ஃப்ளையிங் டேக்கர்ஸ்' என்பது செல்லப் பெயர். கடந்த 2018-ம் ஆண்டு சூலூரில் தேஜாஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, தஞ்சையில் சுகோய்-30 ரக விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு