Published:Updated:

`டிராஃபிக் போலீஸிடம் சிக்கினால் இனி ரூ.100 கட்டினால் போதும்!’ - ஹரியானா போலீஸின் வைரல் ஐடியா?

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ள தொகைக்குப் பதிலாக வெறும் ரூ.100 கட்டினால் போதும் என ஹரியானா போலீஸ் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Traffic Police
Traffic Police

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு 10 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.500 - ஆக இருந்த அபராதம் தற்போது ரூ.5,000 - ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு விதிமீறலை பொறுத்தும் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Helmet
Helmet

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் வாகன ஓட்டிகள் அதிர்ந்து போயுள்ளனர், காவலர்களிடமிருந்து தப்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் விஷயங்கள் வைரலாகி வருகிறது. மேலும், இந்த அபராதங்களைக் குறைக்க பல மாநில அரசுகளும் ஆலோசனை நடத்திவருகின்றன.

இந்த நிலையில், அரசு விதித்துள்ள மொத்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை வெறும் 100 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என ஹரியானாவைச் சேர்ந்த ஒரு காவலர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது.

Sunil sandhu
Sunil sandhu

சுனில் சந்து என்ற காவலர் பேசியுள்ள அந்த வீடியோவில், ``லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, வண்டி பதிவு செய்யப்படாமல் உள்ளது போன்றவற்றுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்காதவர்களுக்கு 10,000 ரூபாயும் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்காமல் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுவருகிறது.

`எல்லாக் கடையிலும் தேடிப் பாத்துட்டேன் சார். ஆனா..!’ - ஹெல்மெட் கதையால் அபராதத்தைத் தவிர்த்த போலீஸ்

ஆனால், காவலர்கள் கேட்கும் மொத்தப் பணத்தையும் தர வேண்டிய அவசியம் இல்லை. வெறும் 100 ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும், அதற்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இடம் உள்ளது. லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் போன்ற ஆவணங்களை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தால், செலான் கொடுத்த அந்தக் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று நம்மிடம் உள்ள ஒரிஜினல் ஆவணத்தை அதிகாரிகளிடம் காட்டி 100 ரூபாய் மட்டும் அளிக்கலாம். செலான் அளித்த 15 நாள்களுக்குள் ஒரிஜினல் ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.

22000 हजार का #चालान 400 में कैसे निपटाए बचें #सही या #गलत जागो #युवा #जागो आगे #शेयर करें

Posted by Sunil Sandhu on Sunday, September 8, 2019

மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வருவது போன்ற குற்றங்களுக்கு இது பொருந்தாது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் பணம் சேமிக்கப்படும்” எனப் பேசியுள்ளார். சுனில் சந்து பேசியுள்ள வீடியோவை இதுவரை ஏழு லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். இதனால் அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் குவிந்துவருகிறது.

இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளப் போக்குவரத்துக் கூடுதல் துணை கமிஷனர் கோபாலை தொடர்புகொண்டு பேசினோம், ``புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் நடைமுறைக்கு வரவில்லை. இங்கு பழைய சட்டமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இங்கு சாலைவிதிகளை மீறுபவர்களுக்கு ரசீது வழங்கப்படும். அவர்கள் தபால் நிலையம், கார்டு, ஆன்லைன் போன்றவற்றில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.

Traffic Police
Traffic Police

எந்தக் காவலரேனும் கையில் பணம் வாங்கினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு விதித்துள்ள இந்தப் புதிய சட்டத்தின் அபராதத்தை மாநில அரசுகள் மாற்றியமைத்து வருவதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் லைசென்ஸை காவல்நிலையத்தில் காட்டி ரூ.100 செலுத்தும் முறை வடமாநிலங்களில் நடைமுறையில் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” என நிதானமாகக் கூறினார்.