சுற்றுசூழல் மாசடைவதற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பி.எஸ்.4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யக் கூடாது என 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஏற்கெனவே, உற்பத்தி செய்த பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்க மார்ச் 31-ம் தேதி வரை அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பி.எஸ்.4 ரக வாகனங்களை உற்பத்தி செய்வதையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறுத்தின. மேலும், பி.எஸ்.6 ரக வாகனங்களை உற்பத்தி செய்வதில் தங்களது கவனத்தை செலுத்தி வந்தன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதால் 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பி.எஸ்.4 வாகன விற்பனையாளர்கள் தங்களது வாகனங்களை விற்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷனின் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்துக்கு அளித்தது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், 15,000 -க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட வணிக வாகனங்கள், இன்னும் விற்கப்படாமல் உள்ளதால் உள்ளூர் டீலர்கள் அதிக நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவற்றை விற்பனை செய்ய 30 நாள்கள் கூடுதல் கால அவசாசம் அளிக்க வேண்டும் எனவும் வியாபாரிகளின் தரப்பில் ஆதரவான வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விற்கப்படாமல் உள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 6,300 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள், ``கொரோனா வைரஸைக் காரணம் காட்டி கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான எந்த நியாயமும் இல்லை. எனினும், மக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விற்பனையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு முடிந்ததும் 10 நாள்கள் விற்பனை செய்யலாம். ஆனால், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது. நாட்டின் சுற்றுச்சூழலை கருத்திக் கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளனர். இதனுடன் வாகனங்களை விற்பதற்கான சில விதிமுறைகளையும் நீதிபதிகள் விதித்துள்ளனர்.
மேலும், வாகனங்களை விற்பனை செய்ய பல்வேறு தள்ளுபடிகளை நிறுவனங்கள் அறிவித்தபோதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மிகப்பெரிய அளவில் எந்த விற்பனை நடைபெறவில்லை என்று டீலர்கள் கூறியுள்ளனர்.
