Published:Updated:

`வாழ்க்கையை இழந்த ‘பில்கிஸ் பானோ'.. கண்டுகொள்ளாத குஜராத் அரசு!'- மீண்டும் `குட்டு' வைத்த நீதிமன்றம்

Bilkis Bano

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனப் போராடத் தொடங்கினால் துணிச்சலும் தைரியமும் தானே வரும். படிப்பறிவோ, பொருளாதாரப் பின்புலமோ இல்லாத நிலையிலும் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

`வாழ்க்கையை இழந்த ‘பில்கிஸ் பானோ'.. கண்டுகொள்ளாத குஜராத் அரசு!'- மீண்டும் `குட்டு' வைத்த நீதிமன்றம்

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனப் போராடத் தொடங்கினால் துணிச்சலும் தைரியமும் தானே வரும். படிப்பறிவோ, பொருளாதாரப் பின்புலமோ இல்லாத நிலையிலும் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

Published:Updated:
Bilkis Bano

குஜராத் கலவரம் இந்திய வரலாற்றின் கறுப்புப் பக்கம் என்று கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி, அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி ரயில் கோத்ரா ரயில்நிலையம் அருகே தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதில் ரயிலில் பயணித்தவர்களில் 57 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கலவரம் கட்டவிழ்க்கப்பட்டது. திரும்பிய இடமெல்லாம் கலவரம். அப்பாவி பொதுமக்கள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள ஓடினர்.

Representation image
Representation image

சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட நான்காம் நாள் மார்ச் 3-ம் தேதி. ஐந்து மாத கர்ப்பிணியான 19 வயதுடைய பில்கிஸ் பானோ தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 17 பேருடன் ஒரு ட்ரக்கில் பயணமானார். அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தை வாகனம் கடக்கும் போது 30க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் வழிமறித்துத் தாக்கினர். ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை 10க்கும் மேற்பட்ட ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவரது 2 வயது மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். கடுமையான காயமடைந்த பில்கிஸ் பானோ இறந்து விடுவார் என நினைத்த கலவரக்காரர்கள் அவரை அப்படியே விட்டுச்சென்றனர். மூன்று மணி நேரம் மயக்கநிலையில் இருந்துள்ளார். அதன்பின்னர் ஒரு பழங்குடியினக் குடும்பத்தால் மீட்கப்பட்டார்.

அந்தச் சம்பவம் குறித்து பின்னர் பேசிய பில்கிஸ் பானோ, “நான் மயக்கம் தெளிந்து பார்த்த போது உடம்பில் ஆடைகளின்றி நிர்வாணமாக இருந்தேன். என்னுடைய குடும்பத்தினர் சடலமாகக் கிடந்தனர். அங்கிருந்த ஆடைகளை எடுத்து எனது உடலை மறைத்துக்கொண்டேன். பின்னர் அருகிலிருந்த மலையை நோக்கி நடந்தேன்”எனத் தெரிவித்திருந்தார்.

Bilkis Bano
Bilkis Bano

பழங்குடியின குடும்பத்தினர் பில்கிஸ் பானோவுக்கு அடைக்கலம் கொடுத்தனர். படிப்பறிவோ, பொருளாதார பின்புலமோ இல்லாத நிலையிலும் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஏழைகளுக்கு அவ்வளவு எளிதில் நியாயம் கிடைத்துவிடுமா என்ன? பாலியல் வன்கொடுமைக்குள்ளான பானோவுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்யக் காலதாமதம் செய்துள்ளார். குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்திலே காவல்துறையும் செயல்பட்டுள்ளது. ஒரு வருடம் கழித்து அவரது அறிக்கை முரண்பாடு இருப்பதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் மாவட்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

தன் குடும்பத்தின் மரணத்தை கண்முன்னே பார்த்தவர். அந்த ரணங்கள் மனதை விட்டு அவ்வளவு எளிதில் நீங்கிவிடுமா என்ன?. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனப் போராடத் தொடங்கினால் துணிச்சலும் தைரியமும் தானே வரும். படிப்பறிவில்லாத பானோ தனக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்பினார். மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினார். அவர்களது முயற்சியால் 2003-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சம்பந்தமாகச் சிலரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

`வாழ்க்கையை இழந்த ‘பில்கிஸ் பானோ'.. கண்டுகொள்ளாத குஜராத் அரசு!'- மீண்டும் `குட்டு' வைத்த நீதிமன்றம்

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக அவருக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. இதன் காரணமாக இரண்டு வருடங்களில் தனது இருப்பிடத்தை 20 முறை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். இதனால் மிகுந்த மனவேதனையடைந்தவர் 2004 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடினார். இந்த வழக்கைக் குஜராத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கைக் மும்பைக்கு மாற்றியது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 நபர்களில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிசெய்தது. பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தடைகளை அழிக்க முயன்றதாக 5 காவல்துறையினர் மற்றும் 2 மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டுக்கு உள்ளான 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.

`வாழ்க்கையை இழந்த ‘பில்கிஸ் பானோ'.. கண்டுகொள்ளாத குஜராத் அரசு!'- மீண்டும் `குட்டு' வைத்த நீதிமன்றம்

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2017-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 5 காவலர்கள் மற்றும் 2 மருத்துவர்களுக்குத் தண்டனை வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 7 பேரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், காவல்துறையினரும், மருத்துவர்களும் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்துள்ளனர். எனவே உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு குஜராத் அரசு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு மேல்முறையீடு செய்தது. இதுபோன்ற சம்பவம் ஏற்படும்போது மாநில அரசு சில வரையறைகளை வைத்து இழப்பீடு வழங்குகிறது. அதனால் இவ்வளவு பெரிய தொகையை அளிக்கமுடியாது என கோரிக்கை வைத்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் இழப்பீடு தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு வீடு மற்றும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.