Published:Updated:

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: மோகன் நாயக் விடுதலையை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம்; இனி..?

மனித உரிமை ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மோகன் நாயக்கை கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டத்திலிருந்து விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மோகன் நாயக்கை, கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டத்திலிருந்து விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் கௌரி லங்கேஷ், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு பெங்களூரு, ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள தன் வீட்டின் முன்புறம், மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் குற்றம் சாட்டப்பட்ட மோகன் நாயக் மீது கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாடு சட்டத்தின் (KCOCA - Karnataka Control of Organised Crimes Act, 2000) கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

கௌரி லங்கேஷ்
கௌரி லங்கேஷ்

இதனை எதிர்த்து மோகன் நாயக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடகா உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மோகன் நாயக்கிற்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லையென்றும், அவர் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் கூறி கடந்த ஏப்ரல் மாதம் KCOCA வழக்கில் இருந்து அவரை விடுவித்தது.

இதனை எதிர்த்து கௌரி லங்கேஷ் சகோதரியும், திரைப்பட தயாரிப்பாளருமான கவிதா லங்கேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில், மோகன் நாயக்குக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள், சிறப்பு விசாரணை குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களான நாயக் அமோல் காலே மற்றும் ராஜேஷ் பங்கெரா ஆகியோருக்கு தங்குவதற்கு இடம் அளித்ததுடன், பல்வேறு உதவிகளை அவர் செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் மோகன் நாயக்கை விடுவித்து தீர்ப்பளித்ததை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் மோகன் நாயக் மீது விசாரணையைத் தொடர உத்தரவிட்டுள்ளது.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay
Vikatan

இதுகுறித்து கௌரி லிங்கேஷ் கொலை வழக்கின் தலைமை வழக்கறிஞர் பாலனிடம் பேசினோம்.

``குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன் நாயக் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழும், மற்றும் கர்நாடகா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பட்டுச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றால் இரண்டு கொலைக் குற்றங்களுக்கு மேலாக குழுவாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாயக் அமோல் காலே மற்றும் ராஜேஷ் பங்கெரா ஆகியோர், 2013-ல் புனேவில் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொலை, மகாராஷ்டிரா, கோலாப்பூரில் கோவிந்த பன்சாரே கொலை உள்ளிட்ட பிற குற்றங்களையும், கர்நாடகாவில் எம்.எம் கல்புர்கி கொலை வழக்கிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவி புரிந்ததன் அடிப்படையில், இந்தக் கொலை வழக்கில் மோகன் நாயக் மீதும் KCOCA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததன் அடிப்படையில்தான், கர்நாடகா உயர் நீதிமன்றம் அந்தக் குறிப்பிட்ட சட்டத்தில் இருந்து மட்டும் அவரை விடுவித்தது. மற்றபடி அவர் மேலான ஐபிசி 302 அப்படியேதான் இருக்கிறது. தொடர்ந்து நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்குச் சென்ற பின், குறிப்பிட்ட இந்தச் சட்டத்தின் கீழ் மோகன் நாயக்கின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது சரிதான் எனக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்'' என்றார்.

Court -Representational Image
Court -Representational Image
Vikatan

மேலும் அவரிடம், உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் வழக்குகளில் உயர் நீதிமன்றத்துக்கு ஏதேனும் வரையறை விதிக்குமா என்று கேட்டபோது, ``மேல் முறையீடுகளில் மிகச் சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அதன் கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கு டீ நோவா ட்ரையல் ('De novo' trial) எனப்படும், மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் உத்தரவை இடும். ஆனால் இது அரிதாகவே நிகழும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு