Published:Updated:

`துரோகம்.. மரணம்.. பயம்' - 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வலம்வரும் கூலித் தொழிலாளி!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தாஹரன் சவுஹான் என்ற நபர் கடந்த 30 வருடங்களாக மணமகள்போல் தன்னை அலங்கரித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிந்தாஹரன் சவுஹான் ஒரு கூலித் தொழிலாளி. கைநிறைய வளையல், காதில் பெரிய கம்மல், கழுத்து முழுவதும் அணிகலன்கள், மூக்கில் பெரிய மூக்குத்தி, நெற்றியில் பெரிய திலகத்துடன் பெண் வேடமிட்டு இத்தனை அலங்காரங்களுடன் கட்டட வேலைக்குச் செல்லும் சவுஹான் ஓர் ஆண். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது சிந்தாஹரன் சவுஹானின் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சிந்தாஹரன் எப்போதும் மணமகள்போல் உடை அணிந்துதான் தனது அன்றாடப்பணிகளை கவனித்துவருகிறார். ஓர் ஆண், மணமகள்போல் உடை அணிந்திருக்கிறார் என்றால் எதாவது காரணம் இல்லாமல் இருக்க முடியுமா. சிந்தாஹரனின் மரணத்தை இந்த மணமகள் உடைதான் தடுத்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. சிந்தாஹரன் சவுஹான் அப்படித்தான் நம்புகிறார். சிந்தாஹரனின் இந்த வேடத்துக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.

சிந்தாஹரன் சவுஹான்
சிந்தாஹரன் சவுஹான்

ஜலல்பூர் நகரத்துக்கு அருகிலிருக்கும் ஹவுஸ்காஸ் கிராமம்தான் சிந்தாஹரன் சவுஹானின் பூர்வீகம். 14 வயதில் திருமணம் நடந்துவிட்டது. திருமணமான சில மாதங்களிலே மனைவி இறந்துவிட்டார். செங்கல் சூளை வேலைக்காக உத்தரப்பிரதேத்திலிருந்து மேற்கு வங்கம் பயணமானார். அப்போது சவுஹானுக்கு 21 வயது. செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்களுக்குத் தேவையான உணவு பொருள்களை வாங்கி வரும் பணியும் சவுஹானுடையதுதான். ஒரு மளிகைக்கடையில் பொருள்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மளிகைக்கடைக்காரருக்கும் சவுஹானுக்கும் இடையே நல்ல நட்பு இருந்துவந்தது. சவுஹானை அவருக்குப் பிடித்துப்போக தன் மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

பிடிமானம், நடை, பேச்சில் இடர்ப்பாடுகளா..? தசைக்களைப்பு நோயாக இருக்கலாம்; அலர்ட்!

சவுஹானுக்கும் அந்தப் பெண்ணின் மீது விருப்பம் இருந்ததால் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினரிடம் கூறவில்லை. எப்படியோ இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்கு எட்டிவிட்டது. சவுஹானின் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மேற்கு வங்கத்திலிருந்து திரும்பி வருமாறு கூறியுள்ளனர். சவுஹானும் தன் மனைவியை மேற்கு வங்கத்திலேயே விட்டுவிட்டு தன் சொந்த கிராமத்துக்குத் திரும்பியுள்ளார். சவுஹான் ஒரு வருடம் கழித்து மீண்டும் மேற்கு வங்கம் சென்றார். திருமணமான சில நாள்களிலே கணவன் விட்டுச்சென்ற சோகத்தில் இருந்த அந்தப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு வருடத்துக்கு பின்புதான் இந்த தகவலே இவருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்து மீண்டும் தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பிவிட்டார். அதன்பின் மூன்றாவதாக இன்னொரு பெண்ணை அவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர்.

திருமணம்
திருமணம்

அதன்பின்னர் நடந்த சம்பவம் குறித்து பேசிய சிந்தாஹரன் சவுஹான், `` நான் மேற்கு வங்கத்திலிருந்து சில மாதங்களில் திரும்பிவிட்டேன். பிறகு எனக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தனர். திருமணமான சில மாதங்களில் என் வீட்டில் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது. நான் உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன். என் வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தது. என் அப்பா முதலில் இறந்தார். அவர் இறந்த சில மாதங்களில் மூத்த அண்ணன் மரணம். அதன்பின் அவரின் மனைவி, அவர்களின் இரண்டு மகன்கள் இறந்தனர். இளைய சகோதரர் உயிரிழந்தார். என் சகோதரனின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் மூன்று மகள்கள் மற்றும் நான்கு மகன்கள் உயிரிழந்தனர். என் குடும்பத்தில் 14 பேரை இழந்துவிட்டேன். இதற்கு எல்லாம் காரணம் தெரியாமல் குழம்பி இருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விபரீதத்தில் முடிந்த காதல்; இளம்பெண் வாழ்க்கையில் விளையாடிய உறவினர்! - தாயைக் கொலை செய்த கொடூரம்

திடீரென ஒரு நாள் இரவு என் இரண்டாவது மனைவி கனவில் வந்தாள். அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு நான்தான் காரணம் என்றாள். என்னைக் குற்றவாளி ஆக்கினாள். அவள் சத்தமாக அழுதாள். என் குடும்பத்தை விட்டுவிடுமாறு நான் அவளிடம் மண்டியிட்டுக் கதறினேன். உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். என் குடும்பத்தை விட்டுவிடு எனக் கெஞ்சினேன். அவளுக்கு என்னுடன் வாழ வேண்டும் என்று விருப்பம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக நிறைய கனவு கண்டிருந்தாள். `என்னை உன்னுடன் வைத்துக்கொள் நீ எப்போது மணமகள் போல் உடையணிய வேண்டும்' என்று கூறினாள். நான் ஒப்புக்கொண்டேன். அதன்படி நான் மணமகள்போல் உடையணியத் தொடங்கினேன்.

`துரோகம்.. மரணம்.. பயம்' - 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வலம்வரும் கூலித் தொழிலாளி!

என்னுடைய உடல்நிலையும் என் மகன்களின் உடல்நிலை அதன்பின் சரியானது. எனது குடும்பத்துக்காக நான் இப்படிச் செய்வதைப் பார்த்து முதலில் அனைவரும் கேலியாகப் பார்த்தனர். பின்னர் மக்கள் எனது நிலையை உணர்ந்துகொண்டனர்” என்கிறார். கடந்த 30 வருடங்களாக சவுஹான் இப்படித்தான் தனது நாள்களை கழித்துவருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது மூன்றாவது மனைவி உயிரிழந்தார். சவுஹானின் செயலை சிலர் மூடநம்பிக்கை என விமர்சிக்கின்றனர். சிலரோ தன் மனைவிக்குச் செய்த துரோகத்துக்காக தனக்குத்தானே இப்படி தண்டனை கொடுத்துள்ளார் என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் சவுஹானுக்கே வெளிச்சம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு