Published:Updated:

`மகாராஷ்டிரா டு நாமக்கல்.. 30 மாணவர்கள்..1,300 கி.மீ!’ -பாதிவழியில் தமிழக மாணவருக்கு நேர்ந்த சோகம்

மரணம்
மரணம் ( Representational Image )

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பயிற்சிக்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றிருந்த நிலையில், லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து வசதி முற்றிலும் தடை செய்யப்பட, மாநில மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. மக்களின் பங்களிப்பு இல்லாமல் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெற்றிபெறுவது என்பது சாத்தியமில்லாதது. அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் மக்களை அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊரடங்கு விழிப்புணர்வுப் பலகை
ஊரடங்கு விழிப்புணர்வுப் பலகை

எனினும் இந்தியாவில் பலரும் வேலைக்காகவும் படிப்புக்காகவும் தங்களின் சொந்த ஊர்களை விட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இந்த லாக்- டவுன் உத்தரவால் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்பது மிக மோசமானது. தங்கி இருந்த இடத்திலும் இருக்க முடியாத சூழல்... தினக் கூலி தொழில் செய்வதால், தற்போது வேலையும் இல்லை வருமானமும் இல்லை. சொந்த ஊருக்குச் சென்றுவிட்டால் எப்படியாவது பிழைத்துவிடலாம் எனக் குடும்பத்தோடு தினமும் பல 100 கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கிறார்கள்.

தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் தொலைதூரத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பயிற்சிக்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றிருந்த நிலையில், லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து வசதி முற்றிலும் தடை செய்யப்பட, மாநில மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.

ஊரடங்கு
ஊரடங்கு
Representational Image

நாமக்கல் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட மாணவர் பாலசுப்ரமணி லோகேஷ், மகாராஷ்டிரா மாநிலம் வர்தா என்னும் இடத்தில் தங்கி, அங்குள்ள கல்லூரியில் உணவு பதப்படுத்துதல் துறையில் பயிற்சி மாணவராகப் படித்து வந்தார். லாக்-டவுன் உத்தரவு காரணமாக மாணவர் லோகேஷ் உட்பட 30 மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வது என முடிவு செய்தனர்.

லோகேஷ் கிட்டத்தட்ட 1,300 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது. எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிட வேண்டும் என 30 மாணவர்களும், நடைபயணமாகவும், வாய்ப்பு கிடைத்த சில இடங்களில் லாரிகள் மூலம் பயணம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 9 நாள்கள் தொடர்ந்த பயணத்தில் 450 கிலோமீட்டர் தூரம் கடந்த நிலையில் அவர்கள் தெலங்கானா மாநிலம் செகந்தராபாத் வந்தடைந்தனர். அங்கு போவென்பள்ளி பகுதியில் போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளால் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
hindustantimes

லாக் - டவுன் உத்தரவு காரணமாகத் தொடர்ந்து நடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த அதிகாரிகள், அங்கு இருந்த மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். நீண்ட பயணத்துக்குப் பிறகு உணவு உண்ட மாணவர்கள் அங்கு ஓய்வு எடுத்தனர். பின்னர் சில மாணவர்கள் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில் லோகேஷ் திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். உடனடியாக மாணவர்கள் போலீஸாருக்குத் தகவல் சொல்ல, லோகேஷ் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் லோகேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தத் தகவல் மற்ற மாணவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, மாணவர் லோகேஷின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவரது இறப்புக்கு மாரடைப்பு காரணமாகச் சொல்லப்பட்டது.

death
death
Representational image

கடந்த 9 நாள்களாக தொடர்ச்சியாக நடந்து வந்ததால், அவருக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாணவர் லோகேஷின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு