Published:Updated:

`களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகமாகிவிட்டது’ - கொரோனா பாதிப்புக்கு ரூ.1,500 கோடி அறிவித்த டாடா

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட டாடா குழுமத்தின் சார்பாக 1,500 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் வரலாற்றில் தற்போது கொரோனா நிகழ்த்திக்கொண்டிருக்கும் மோசமான நிலை முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். முன்பெல்லாம் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது உருவான நாடு மற்றும் அருகில் உள்ள ஒரு சில நாடுகளிலேயே பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மொத்த மனிதகுலத்தையும் அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,62,967 ஆக உள்ளது. உயிரிழப்புகள் 30,000-த்தை கடந்திருக்கிறது. வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக வர்த்தகம் முதல் உள்ளூர் சிறு, குறு வியாபாரம் வரை என அனைத்தும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

`மருத்துவருக்கு பாசிட்டிவ்; தனிமைப்படுத்தப்பட்ட 8 பேர்’ - அமேசான் பழங்குடிகளையும் துரத்தும் கொரோனா?

மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான மக்கள் வேலையிழந்து தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 1,70,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மருத்துவ வசதிகளுக்காகவும் பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் எனப் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதை ஏற்ற பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் போன்ற அனைவரும் தங்களால் முடிந்த தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தன் ட்ரஸ்ட் மூலம் 500 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ``இந்தியா மற்றும் உலக அளவில் இப்போது சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை மிகவும் அவசியமானது. இதற்கு முன் தேசத்துக்குத் தேவை இருக்கும்போது டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் நிறைய பங்காற்றியுள்ளன. முன்பைவிட இந்தத் தருணத்தில் கலத்தில் இறங்குவதற்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.

‘ஃபிடல் காஸ்ட்ரோவின் மந்திரம்; உலகைக் காக்கும் மருத்துவர்கள்’ -கியூபாவின் தலைசிறந்த சேவை! #Corona

கோவிட் 19 பிரச்னையை எதிர்க்கத் தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. இது மனித இனம் இதுவரை எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ அவர்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபாய் தருகிறது.

* களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள்

* நோயாளிகளுக்குச் சிகிச்சை தரச் சுவாச உதவிக்கான உபகரணங்கள்.

* வைரஸ் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கருவிகள்.

* பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மாதிரி சிகிச்சை வசதிகள்.

* துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பயிற்சி போன்றவை வழங்கப்படும்.

ஒரு ஒன்றிணைந்த பொதுச் சுகாதார தளத்தில் சேவை நோக்கத்துக்காக இணைந்துள்ள மற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனும் அரசாங்கத்துடனும் கை கோக்கிறது டாடா குழும நிறுவனங்கள். இந்தக் குழு சமூகத்தில் பின் தங்கிய, வறுமையில் வாடுபவர்களைச் சென்றடையத் தொடர்ந்து பணியாற்றும். இந்த வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளோம்’ என்று தன் அறிக்கையில் ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

இவர் 500 கோடி ரூபாய் அறிவித்த அடுத்த சில மணி நேரத்தில் டாடா சன்ஸ் குழுமத்திலிருந்து 1,000 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட டாடா குழுமத்திலிருந்து மொத்தம் 1,500 கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு