Published:Updated:

`மொதல்ல, 50 கோடி கடனைக் கட்டுங்க!’ - லோன் கேட்ட டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி

ராஜ் குமார்
ராஜ் குமார் ( ANI2 )

கடன் பாக்கி நோட்டீஸ் காரணமாக அவரது சிபில் ஸ்கோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற வங்கிகளிலும் அவரது லோன் முயற்சிகள் தோல்வியில் முடிவதாக வருத்தம் தெரிவிக்கிறார், டீக்கடைகாரர் ராஜ்குமார்.

கொரோனா வைரஸ் பரவல் ஒவ்வொருவர் வாழ்விலும் பல்வேறு அனுபவங்களை விட்டுச் சென்று வருகிறது. கொரோனா பரவலும் அதைத் தொடர்ந்த ஊரடங்குகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் வங்கியில் கடன் கேட்ட டீக்கடைக்காரருக்கு வங்கி நிர்வாகம் கொடுத்தது பணம் அல்ல... பெரும் அதிர்ச்சி.

ராஜ் குமார்
ராஜ் குமார்

ஹரியானா மாநிலம், குருக்‌ஷேத்ரா பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது வருமானம் முழுவதுமாக நின்றுபோனது. கொரோனா ஊரடங்கு காரணமாகத் தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட, வங்கியை லோனுக்காக அணுக முடிவு செய்தார். வங்கியில் லோன் கேட்டு அவர் பதிவு செய்த அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆனது. கூடவே ஒரு அதிர்ச்சி நோட்டீஸும் வந்தது.

அதில் இவர் வங்கிக்கு இதுவரை கட்டாமல் வைத்திருக்கும் ரூ. 50.76 கோடி கடன் தொகையை உடனே கட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது குறித்து ராஜ் குமார் பேசுகையில், ``கொரோனா காரணமாக எனது வருமானம் முழுமையாகப் பாதித்தது. அதனால் வங்கியில் லோன் கேட்டிருந்தேன். ஆனால், வங்கித் தரப்பில் எனது மனுவை ரத்து செய்திவிட்டார்கள். மேலும், வங்கிக்கு நான் 50 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும் சொன்னார்கள். இது எப்படிச் சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லை” என்றார். இதுவரை ராஜ்குமார் வங்கியில் இருந்து எந்த லோனும் பெற்றதில்லையாம்.

ராஜ் குமார்
ராஜ் குமார்

வங்கித் தரப்பிலிருந்து ராஜ்குமாருக்கு அனுப்பட்ட நோட்டீஸை ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடன் பாக்கி நோட்டீஸ் காரணமாக அவரது சிபில் ஸ்கோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற வங்கிகளிலும் அவரது லோன் முயற்சிகள் தோல்வியில் முடிவதாக வருத்தம் தெரிவிக்கிறார். இந்த விவகாரம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இணையத்தில் பலரும் இந்தனை தவறுதலாக வங்கி நிர்வாகம் அனுப்பி இருக்கலாம் என்கிறார்கள். எனினும் சிலர், ஒருவேளை வேறு யாராவது இவரது பெயரில் லோன் பெற்று மோசடியில் ஈடுபட்டிருபார்களோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளனர்.

கொரோனா : `கடவுள் நினைத்தால் எல்லாம் மாறும்!’ - 3 வது முறையாக பிரேசில் அதிபருக்கு பாசிட்டிவ்
அடுத்த கட்டுரைக்கு