Published:Updated:

`மோடிக்கு ராஜதந்திரத்தைக் கற்றுக்கொடுங்கள் ஜெய்சங்கர்’-`ட்ரம்ப் சர்க்கார்’ கருத்தை விமர்சித்த ராகுல்

அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசிய கருத்து சர்ச்சையானதை அடுத்து அவரது கருத்தை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

Modi - Trump
Modi - Trump ( AP )

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டு 50,000 இந்தியர்கள் முன்னிலையில் பேசினார். அதே நிகழ்ச்சியில் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொண்டார். அப்போது மக்கள் முன் பேசிய மோடி, “ அதிபர் ட்ரம்ப் தனக்கும் இந்தியாவுக்கும் சிறந்த நண்பர். இந்த உலகத்தில் டொனால்டு ட்ரம்ப் என்ற பெயர் மிகவும் பிரபலம். அவர் ஒரு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்து தற்போது ஒரு நாட்டின் அதிபராக உயர்ந்துள்ளார்.

Modi - Trump
Modi - Trump
AP

அடுத்த வருடம் நடைபெறவுள்ள அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார். 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என அனைவரும் உரக்கக் கூறுங்கள். இதை ட்ரம்ப் தன் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவார்” எனப் பேசியிருந்தார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது, தான் பயன்படுத்திய ’ஆப் கி பார் மோடி சர்க்கார்’ என்ற வார்த்தையைத் தான் அமெரிக்காவில் அப்படியே மாற்றிப் பேசியிருந்தார் மோடி. இதற்கு ‘இந்த முறையும் ட்ரம்ப் ஆட்சி அமையவேண்டும்’ என்பது அர்த்தம்.

அமெரிக்காவில் ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பிரசாரம் செய்தார் எனச் சர்ச்சை கிளம்பியுள்ளது. மோடியின் இந்தக் கருத்துக்குத் தேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ளார்.

Jaishankar
Jaishankar

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மோடி அப்படி பேசவில்லை. தயவு செய்து பிரதமரின் கருத்தை உற்றுக் கவனியுங்கள். ‘ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ என்ற வாசகத்தை முன்னதாக தன் தேர்தலில் ட்ரம்ப் பயன்படுத்தியிருந்தார் என்றுதான் மோடி கூறினார்.

`பாகிஸ்தானுக்கு பதிலளித்துவிட்டார்!’ - `குளோபல் கோல்கீப்பர்’ மோடியைப் புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்

நாங்கள் நேர்மையாகக் கூறியதை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை. மோடி எதைப் பற்றிப் பேசினார் எனத் தெளிவாக உள்ளது. இந்தியாவையும் அதன் மக்களையும் ஒரு வேட்பாளராக இணைக்க வேண்டும் என்றுதான் பேசினார். அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவது மிகவும் பாகுபாடற்ற அணுகுமுறையாகக் கருதுகிறது” எனப் பேசியுள்ளார்.

அமைச்சரின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``நம் பிரதமரின் திறமையற்ற தன்மையை மூடி மறைத்துப் பேசிய அமைச்சர் ஜெயசங்கருக்கு நன்றிகள். மோடியின் ஒப்புதல் இந்தியாவுக்கான ஜனநாயகக் கட்சியினருடன் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் தற்போது உங்களின் தலையீடு சிக்கல்களைச் சரிசெய்யும் என நினைக்கிறேன். சற்று அவருக்கு ராஜ தந்திரத்தைப் பற்றிக் கற்றுக்கொடுங்கள்” என மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.