Published:Updated:

`உயிரைப் பணயம் வைத்து பணி செய்கிறேன்' -மலைக் கிராம பள்ளியில் உண்ணாவிரதம் இருக்கும் படகோட்டி ஆசிரியை

உன்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியை உஷாகுமாரி
உன்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியை உஷாகுமாரி

கடந்த 6 மாதங்களாக கேரள அரசு சம்பளம் வழங்காமல் உள்ளதாகவும், தன்னைப் போன்ற ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 4 நாள்களாக மலையின் மீதுள்ள பள்ளியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஆசிரியர் உஷாகுமாரி.

படகு ஓட்டிச் சென்று 17 ஆண்டுக்கு மேலாக மலை கிராம மாணவர்களுக்கு பாடம் நடத்திவருவதன் மூலம் கவனம் பெற்றவர் ஆசிரியர் உஷாகுமாரி. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குந்நத்துமலையில் உள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் உஷாகுமாரி. நெய்யாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியால் துண்டிக்கப்பட்டிருக்கும் இந்த மலையில் உள்ள பள்ளிக்கு 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வரும் இவரது சொந்த கிராமம் அம்பூரி. வீட்டிலிருந்து பைக்கில் புறப்படும் இவர், நெய்யாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியை படகில் துடுப்புப்போட்டு கடந்து சென்று சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு செங்குத்து மலையில் நடந்தே செல்கிறார். வழியில் மாணவர்களுக்கு கூக்குரல் மூலம் சிக்னல் கொடுத்து அவர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். 17 ஆண்டுகளுக்கு மேலாக படகு ஓட்டிச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியை உஷாகுமாரியின் சேவையை மக்கள் வியந்து பாராட்டிவருகின்றனர்.

ஆசிரியை உஷாகுமாரிக்கு ஆதரவாக மலை கிராம மக்கள்
ஆசிரியை உஷாகுமாரிக்கு ஆதரவாக மலை கிராம மக்கள்

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக கேரள அரசு சம்பளம் வழங்காமல் உள்ளதாகவும், தன்னைப் போன்ற ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 4 நாள்களாக மலையின் மீதுள்ள பள்ளியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஆசிரியர் உஷாகுமாரி. இதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது, ``கேரள மாநிலத்தில் மலைவாழ் மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதற்காக சுமார் 340 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. மலை, காடுகளில் பயணிக்கும்போது வன விலங்குகள் தாக்கி இறந்த ஆசிரியர்களும் உண்டு. நானும் கால்வலி, ஆஸ்துமா நோய்களுடன் மலை ஏறி பாடம் நடத்தி வருகிறேன்.

எங்களுக்கு கடந்த ஓணம் பண்டிகை சமயத்தில் சம்பளம் கிடைத்தது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. என் கணவர் பாரம் ஏற்றி இறக்கும் பணி செய்து வருகிறார். எனது வருவாயை வைத்துதான் வீட்டு லோன், பிள்ளைகளின் படிப்புச் செலவு என எல்லாம் பார்க்க வேண்டும். மாதம்தோறும் ஊக்கத்தொகை போன்று சம்பளம் மட்டுமே தருகிறார்கள். மற்றபடி அரசு ஊழியர்போன்று பி.எஃப், இ.எஸ்.ஐ, பணபலன் என எதுவும் எங்களுக்கு இல்லை.

மாணவர்களுடன் ஆசிரியை உஷாகுமாரி
மாணவர்களுடன் ஆசிரியை உஷாகுமாரி

எனவே, எங்களுக்கான 6 மாதச் சம்பளத்தை உடனே வழங்குவதுடன், உயிரைப் பணயம் வைத்து பணி செய்யும் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்து கடந்த 4 நாள்களாக பள்ளியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறேன். எனக்கு ஆதரவாக மலை கிராமத்து மக்கள் உள்ளனர். சம்பளம் வழங்கலாம் என கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். ஆனால், எங்களைப் பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 340 ஓராசிரியர் பள்ளிகளின் ஆசிரியர்களும் இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் போராட்டத்தை தொடங்குகின்றனர்" என்றார்.

ஆசிரியர் உஷாகுமாரிக்கு ஆதரவாக குந்நத்து மலை கிராம மக்களும் பள்ளியிலேயே தங்கி உதவிகள் செய்து வருகின்றனர். பிற பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்று போராட்டம் தொடங்குவதால் இவருக்கு ஆதரவு பெருகியுள்ளது. மேலும், கேரளத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர் அமைப்புகள் உள்ளிட்டவையும் நேரில் சென்று ஆசிரியை உஷாகுமாரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு