Published:Updated:

`இறுதியாக ஒன்று; கற்பிப்பது உங்கள் வேலை இல்லை’- ஃபட்னாவிஸ் மனைவியைச் சாடிய சிவசேனா

ஆக்சிஸ் வங்கிக் கணக்கு மாற்ற விவகாரம் தொடர்பாக அம்ருதா ஃபட்னாவிஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.

அம்ருதா- பிரியங்கா
அம்ருதா- பிரியங்கா

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், தொடர்ந்து தற்போதுள்ள மகாராஷ்டிரா அரசினையும், முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவையும் சீண்டி வருகிறார். இதனால் அம்ருதா துணைத் தலைவராக வேலை செய்து வரும் ஆக்சிஸ் வங்கியில், முன்னாள் பா.ஜ.க அரசு வைத்திருந்த காவலர்களின் சம்பளக் கணக்கு தற்போது தேசிய வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஃபட்னாவிஸ்
ஃபட்னாவிஸ்

இந்த விவகாரம் அம்ருதாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்த, உத்தவ் தாக்கரேவை மேலும் கடுமையாக விமர்சித்து ட்வீட்டியுள்ளார். `மோசமான ஒரு தலைவரைப் பெற்றது மகாராஷ்டிராவின் தவறல்ல. ஆனால் அவரே நீடிப்பதுதான் தவறு. விழித்துக்கொள் மகாராஷ்டிரா” எனப் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

`உத்தவ் தாக்கரே - அம்ருதா ஃபட்னாவிஸ் மோதல்!’ - அரசியலாகும் அரசு வங்கிக் கணக்கு?

இதற்கிடையில் வங்கிக் கணக்கு மாற்றம் தொடர்பாக எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அம்ருதா அளித்துள்ள பேட்டியில், ``நான் ஃபட்னாவிஸைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாக அதாவது காங்கிரஸ்- என்.சி.பி ஆட்சிக்காலத்தில், காவலர்களின் சம்பளக் கணக்கு ஆக்சிஸ் வங்கிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளும் இந்தியாவுக்குச் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. ஆக்சிஸ் வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றியதன் மூலம் அவர்கள் என்னையும் ஃபட்னாவிஸையும் குறிவைக்க முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

அம்ருதாவின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி, ``இதை ‘பழிதீர்க்கும் நடவடிக்கை’ என அம்ருதா கூறியுள்ளது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. உண்மையில் அம்ருதாவின் பேட்டியைப் படித்த பிறகுதான் ஒன்று தோன்றுகிறது.

ஆக்சிஸ் வங்கியிலிருந்த அரசு கணக்கு முறையாக நிர்வகிக்கப்பட்டதா, வட்டி விகிதங்கள் சரியாக உள்ளதா என்று மகாராஷ்டிரா அரசு விசாரணை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் பா.ஜ.க திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதையும் விசாரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி

அவரது மற்றொரு ட்வீட்டில், ``கடைசியாக அம்ருதாவுக்கு ஒரு குறிப்பு சொல்ல விரும்புகிறேன். மகாராஷ்டிராவைக் கணிப்பது மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளவர்களுக்குக் கற்பிப்பது போன்றவை உங்கள் ஆக்சிஸ் வங்கி வேலையின் கீழ் வராது. சுவரில் கிறுக்க நினைப்பவர்கள் முதலில் அதில் எழுதியுள்ளதைப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.