Published:Updated:

`காலதாமதமான இந்தியாவின் முதல் தனியார் ரயில்!' - ரூ.1.62 லட்சம் இழப்பீடு வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி

தேஜஸ் ரயில் காலதாமதமாக இயக்கப்பட்டதையடுத்து பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது.

Tejas Express
Tejas Express

இந்திய ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சோதனை முயற்சியாக இந்த மாதம் தொடக்கத்தில் லக்னோ- டெல்லி இடையே முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வே துறையின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி இந்த ரயிலை இயக்குகிறது. இந்த ரயிலின் கட்டணம் சற்று கூடுதல் எனக் கூறப்படுகிறது. விமானத்தில் பயணிகளுக்கு வழங்குவது போன்று உணவுகள், டீ, காபி மற்றும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியானது.

Tejas Express
Tejas Express

இதில், புதுமுயற்சியாக ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு 100 ரூபாயும் 2 மணி நேரம் தாமதமாக வந்தால் 250 ரூபாயும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அப்போது இது எல்லாம் சாத்தியமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. பயணிகளை ஈர்ப்பதற்காக இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகின்றன என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ரயில் தாமதமாக இயக்கப்பட்டதையடுத்து பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடாக வழங்க உள்ளனர்.

`ஒரே வாரத்தில் அதீத கட்டண உயர்வு!' - விதிமீறலில் சிக்கிய `தனியார் ரயில்' தேஜஸ்

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், ``உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் ரயில் கடந்த 19-ம் தேதி காலதாமதமாக புறப்பட்டது. லக்னோவிலிருந்து காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் 9.55 மணிக்குப் புறப்பட்டது. 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது. அந்த ரயில் டெல்லிக்கு மதியம் 12.55 மணிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் 3.40 மணியளவில் சென்றடைந்தது. அதேபோல் 3.35 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக 5.30 மணிக்குதான் புறப்பட்டது. இரவு 10.05-க்கு வரவேண்டிய ரயில் 11.05-க்குதான் வந்தடைந்தது.

Tejas Express
Tejas Express

ரயில் லக்னோவிலிருந்து டெல்லிக்குப் புறப்படும்போது 450 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு இழப்பீடாக ரூ.250 வீதம் கிடைக்கும். அதேபோல் டெல்லியிலிருந்து புறப்படும்போது 500 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.100 வழங்கப்பட இருக்கிறது. கான்பூர் அருகே தடம்புரண்ட ரயிலை அப்புறப்படுத்தியதால்தான் இந்த காலதாமதம் ஏற்பட்டது. அதேபோல் கடந்த 20-ம் தேதி லக்னோவிலிருந்து டெல்லி வந்த தேஜஸ் ரயில் 25 நிமிடங்கள் காலதாமதமாக வந்தது. மற்ற நாள்களில் ரயில் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறது. இதுவரை எந்தக் காலதாமதமும் ஏற்படவில்லை” என்றனர்.