Published:Updated:

`120 அடி ஆழம்; போர்வெல்லில் விழுந்த 3 வயதுச் சிறுவன்!' - வேதனையில் முடிந்த 12 மணி நேரப் போராட்டம்

தெலங்கானாவின் மேடக் மாவட்டத்தில் 120 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 3 வயதுச் சிறுவன்12 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டான்.

ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள பட்டஞ்சேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவர்த்தன் - நவீனா தம்பதியினர். புகைப்படக் கலைஞரான கோவர்த்தன் தனது 3 வயது மகன் சஞ்சய் சாய் வர்த்தன் மற்றும் மற்ற இரண்டு குழந்தைகளோடு மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள குழந்தைகளின் தாத்தா வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

சிறுவன் மீட்புப் பணி
சிறுவன் மீட்புப் பணி
ANI

குழந்தைகளின் தாத்தாவான மங்களி பிக்‌ஷாபதி, தனது விவசாய நிலத்தில் தண்ணீர்த் தேவைக்காக 120 அடி ஆழத்தில் மூன்று ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டியிருக்கிறார். ஆனால், அந்த மூன்று ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்தக் கிணறுகளை மூட பிக்‌ஷாபாதி திட்டமிட்டு அதுதொடர்பாகச் சம்பவ இடத்தில் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது தன் தந்தை மற்றும் தாத்தாவுடன் அங்கு வந்திருந்த 3 வயது சஞ்சய், ஆழ்துளைக் கிணறு ஒன்றில் தவறிவிழுந்ததாகத் தெரிகிறது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகப் போலீஸார் கூறுகிறார்கள். பதறிய சஞ்சயின் குடும்பத்தினர், உடனடியாகக் குழிக்குள் சேலையை இறக்கி சிறுவனை மீட்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால், முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டது. முதலில் அந்தச் சிறுவன் 25 அடியில் சிக்கியிருப்பதுக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு
ANI

சிறுவனை மீட்கும் முயற்சியில் போலீஸார், வருவாய்த் துறையினருடன் தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகளும் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை, உடனடியாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கிறார். மணப்பாறையில் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோது சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் மீட்புப் பணியைப் பார்வையிட்டவர் விஜயபாஸ்கர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேடக் மாவட்ட கலெக்டர் கே.தர்மாரெட்டி, காவல்துறை எஸ்.பி சந்தனா தீப்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். சுமார் 12 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த மீட்புப் பணியில் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை சடலமாக இன்று அதிகாலையில் மீட்டனர். போலீஸார் கூறுகையில், ``எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த சிறுவனை எங்களால் உயிருடன் மீட்க முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்தச் சிறுவன் இறந்திருக்கலாம். 25 அடியில் சிக்கியிருந்த சிறுவனின் உடலை மீட்டிருக்கிறோம். பிரேதப் பரிசோதனைக்காக மேடக் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்திருக்கிறோம்’’ என்றார்.

ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது எளிது! வழிகாட்டும் விவசாயி #CloseTheDeadWells

இதுகுறித்து பேசிய மேடக் மாவட்ட ஆட்சியர் தர்மா ரெட்டி, ``அந்த 3 ஆழ்துளைக் கிணறுகளும் உரிய அனுமதி பெறாமல் தோண்டப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு