Published:Updated:

`மே 7 வரை ஊரடங்கு; தளர்வு இல்லை; வெளிமாநிலத்தவர் நுழையத் தடை!’ -தெலங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் எந்தத் தளர்வும் இல்லை என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 23-ம் தேதியே முதல்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்ததால் இரண்டாம் கட்டமாக வரும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கில் இன்று முதல் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

ஊரடங்கு
ஊரடங்கு

மேலும், வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள அதாவது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது என்றும் ஏப்ரல் 20-க்கு மேல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விதிகளுக்குட்பட்டு அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெலங்கானா அரசு தங்கள் மாநிலத்துக்கான ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தியாவிலேயே ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலமாக இது உள்ளது.

`ஏப்ரல் 7-ம் தேதிக்குள் வைரஸை கட்டுப்படுத்திவிடுவோம்!’ - தெலங்கானா முதல்வரின்  நம்பிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்துவது தொடர்பாக நேற்று தெலங்கானா பிரகதி பவனில் சுமார் 6 மணி நேரமாக அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், ``தொற்று நோய்கள் சட்டத்தின்படி, கோவிட் -19 போன்ற கடுமையான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. அதனால் தெலங்கானாவின் நலனுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

உலகம் முழுவதும் உள்ள கொரோனா வைரஸின் நிலை கவலையளிக்கிறது. பல நாடுகளில் வைரஸின் பரவல் தனிந்தும் திரும்பவும் வருகிறது. ஊரடங்கைத் தளர்த்திய 42 நாடுகள் மீண்டும் பல கட்டுப்பாடுகளை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவர்களின் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அமைச்சரவை, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநிலத்தின் நிலைமையைப் பற்றி முழுமையாக விவாதித்தது. இறுதியில் எந்தத் துறைக்குத் தளர்வுகள் வழங்கப்படமாட்டாது என்றும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் மேலும் ஊரடங்கு மே 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதனால்தான் ஊரடங்கு மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கைச் செயல்படுத்துவதில் நாங்கள் கடுமையாக இருப்போம். மே 5-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி வைரஸ் தொடர்பாகவும் ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.

மேலும், அத்தியாவசியப் பொருள்களின் ஆன்லைன் சப்ளையர்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் ஏப்ரல் 20-ம் தேதி முதல் தடை செய்யப்படுகிறது. உணவின் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்குப் பிறகு மாநிலங்களுக்கு இடையேயான விமான சேவைகள் தொடங்கினாலும் வெளி மாநிலப் பயணிகளை ஹைதராபாத் நகருக்குள் நுழைய நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்
ஹைதராபாத்

இது மட்டுமல்லாது, மே 7-ம் தேதி வரை தெலங்கானாவில் மதம் அல்லது அரசியல் ரீதியாக எந்தக் கூட்டமும் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 ம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம், மாதக் கட்டணம் தாண்டி வேறு எதையும் வசூலிக்கக் கூடாது என்று தனியார் பள்ளிகளைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கில் மூடப்பட்டுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளுக்கு மின்கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து அரசு ஊழியர், ஓய்வூதியம் பெறுவோரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 75% வரை சம்பள குறைப்பு செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது,

அடுத்த கட்டுரைக்கு