Published:Updated:

`அது எங்கள் பாரம்பர்ய சொத்து..!' - காலில் விழுந்து கதறிய விவசாயிகள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தினேஷ் ராமையா

மூதாதையர் காலத்தில் இருந்து தங்களிடம் இருந்துவரும் பாரம்பர்ய சொத்தான விவசாய நிலத்தை மீட்க உதவி செய்யக் கோரி விவசாயிகள், தெலங்கானா மாநில அரசு அதிகாரி ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.

farmers
farmers ( Facebook )

தெலங்கானா மாநில வருவாய்த்துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் நிலப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. அதையடுத்து, மாநிலம் முழுவதுமுள்ள நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நடைமுறையால் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாக விவசாயிகள் புகார் கூறிவருகிறார்கள்.

Farmers
Farmers
Facebook

அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. அந்த மாவட்டத்தின் செவல்லா பகுதியைச் சேர்ந்த சாத்தையா, லிங்கையா ஆகிய இருவர், தங்கள் நிலப்பத்திரங்களைத் திரும்பப் பெற உதவுமாறு வருவாய்த்துறை அதிகாரி ஒருவரின் காலில் விழுந்து கெஞ்சுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொள்ளையர்களிடம் போராடிய முதியவர், இரவில் அதிரடி காட்டிய விவசாயி மனைவி!- பதறவைக்கும் வீடியோ

தங்களுடைய நிலத்தில் ஆய்வுமேற்கொண்ட பின்னர், நிலப்பட்டாவை அதிகாரிகள் வாங்கிச் சென்றுவிட்டதாகக் கூறும் அந்த விவசாயிகள், அதைத் திரும்பப் பெற உதவ வேண்டும் எனக் கெஞ்சுகிறார்கள். தங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து தங்களுக்குச் சொந்தமாக இருந்துவரும் அந்த 2 ஏக்கர் விவசாய நிலம் பாரம்பர்ய சொத்து எனவும் அதன் பத்திரத்தை மீட்டுத் தர உதவ வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் குறைந்தபட்ச மரியாதைகூட அளிப்பதில்லை
விவசாயிகள்

ஆனால், அந்த அதிகாரியோ எதையும் கண்டுகொள்ளாததுபோல் விலகிச் செல்கிறார். அந்த நிலத்தின் பதிவுகள் அழிக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறினர்.

`அதிகார பலம், பாலில் முறைகேடு செய்றாங்க!' - பெண் கலெக்டரிடம் கொந்தளித்த விவசாயிகள்

அந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சாத்தையா, `கலெக்டரிடம் முறையிட்டால் ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். ஆனால், அவருக்குக் கீழுள்ள அதிகாரிகள் எங்களுக்கு உதவ மறுக்கிறார்கள். நிலப்பட்டாவை மீட்க வேண்டி கடந்த 6 முதல் 8 மாதங்களாகத் தொடர்ச்சியாக நாங்கள் அலைகிறோம். அதிகாரிகள் எங்களுக்கு உதவாமல் அலைக்கழித்து வருகிறார்கள்'' என்று பொங்குகிறார்.

லிங்கையா கூறுகையில், ``அதிகாரிகள் எங்களுக்குக் குறைந்தபட்ச மரியாதைகூட தருவதில்லை. `நாங்கள் விவசாயிகள். எங்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள்' என்று கேட்டால். `வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்' என்று மிரட்டுகிறார்கள்'' என்று புகார் தெரிவிக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனி கவனம் செலுத்தி விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெலங்கானா அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.