Published:Updated:

`நான் நேர்மையானவன்; எனக்கு பாதுகாப்பு கொடுங்கள்!’- போலீஸுக்கு ஒரு`சின்சியர்’ அதிகாரியின் கோரிக்கை

`என்னுடன் பணிபுரியும் பலரும் லஞ்சம் வாங்குகிறார்கள். என்னையும் வாங்குமாறு தூண்டுகின்றனர். நான் மறுப்பதால் என்னை எதற்கும் லாயக்கற்றவன் என்று திட்டுகின்றனர்.’

அசோக்
அசோக்

தெலங்கானாவில் அப்துல்லாபர்மட் தாலுகாவில் தாசில்தாராக இருந்தவர் விஜயா ரெட்டி. நிலத்துக்கு பட்டா வழங்குவது தொடர்பான விவகாரத்தில் சுரேஷ்குமார் என்பவர் விஜயா ரெட்டியை அவரின் அலுவலகத்தில் வைத்தே தீ வைத்து எரித்துக் கொலை செய்தார். தனக்குச் சொந்தமான நிலத்தை வேறு ஒருவருடன் சேர்ந்து விற்பனை செய்ய விஜயா ரெட்டி முயன்றதால், அவரைக் கொலை செய்ததாக சுரேஷ்குமார் வாக்குமூலமும் அளித்தார்.

விஜயா ரெட்டி
விஜயா ரெட்டி

இந்தச் சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜயா ரெட்டி கொலைக்குப் பிறகு அரசு அதிகாரிகள் கடும் எச்சரிக்கையுடன் பணிபுரிந்து வருகின்றனர். பெண் தாசில்தார்கள் கையில் மிளகாய்ப் பொடி அடங்கிய பாட்டில்களுடன் பணிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இரு தினங்களுக்குமுன் கரீம் நகரில் விவசாயி ஒருவர், தனக்கு சான்றிதழ் அளிக்காததால் கோபமடைந்து தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருள்களை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவமும் நடந்தது.

தாசில்தார் கொலையில் அடுத்த அதிர்ச்சி... காப்பாற்றச் சென்ற டிரைவரும் இன்று மரணம்

தெலங்கானா அரசு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கும் நிலையில், ஒருவர் மட்டும் `நான் நேர்மையானவன்' என்று சொன்னால் மற்றவர்களுக்கு கோபம் வரும்தானே! `நான் லஞ்சம் வாங்காதவன்' என்று அரசு அதிகாரி ஒருவர் போர்டு வைத்து பணிபுரிய, மற்றவர்கள் கோபமடைந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

வழக்கமாக, அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று மக்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிப்பார்கள். இங்கே... `நான் நேர்மையானவன்' என்று போர்டு வைத்தவர் தனக்கு சக ஊழியர்களிடத்திலிருந்து பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸிடத்தில் புகார் அளித்துள்ளார்.

பாதுகாப்புக்காக கயிறு கட்டியுள்ள பெண் தாசில்தார்
பாதுகாப்புக்காக கயிறு கட்டியுள்ள பெண் தாசில்தார்

கரீம் நகரில் தெலங்கானா மாநில மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக பணிபுரிகிறார் பெடாத்தி அசோக். பணியில் நேர்மையாக இருக்கும் அசோக் கை சுத்தம் கொண்டவர். மற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்கி சொத்துகளை குவித்து வருகையில், பெடாத்தி அசோக் ஒரு சாதாரண வீட்டில்தான் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில், அவர் லஞ்சம் வாங்குபவர்களிடத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட நினைத்தார்.

ஒரு மாதத்துக்கு முன்பு தன் அலுவலக அறையில், `நான் லஞ்சம் வாங்கமாட்டேன்' என்ற வாசகம் அடங்கிய போர்டை வைத்தார். இந்த போர்டு வைக்கப்பட்டதிலிருந்து அவருக்கு மற்ற ஊழியர்களிடத்திலிருந்து போன் மேல் போன் வந்தது. போர்டை அகற்றுமாறு மற்ற அலுவலர்கள் அசோக்கை வற்புறுத்தியுள்ளனர். சிலர், `நீ மட்டும்தான் யோக்கியமோ... உன்னை லஞ்ச வழக்கில் சிக்க வைக்கிறோம்' என்று மிரட்டியுள்ளனர். இன்னும் சிலர் கொலை மிரட்டலும் விடுத்தனர். அசோக் எந்த மிரட்டலுக்கும் அஞ்சவும் இல்லை. மனம் கலங்கவும் இல்லை. போர்டை அகற்றவும் இல்லை. மாறாக ஒரு காரியம் செய்தார்.

கரிம்நகர் போலீஸ் நிலையம் சென்று, புகார் அளித்தார் அசோக். வித்தியாசமான புகாரைக் கண்டு போலீஸாருக்கும் ஒரே ஆச்சர்யம். போலீஸாரிடத்தில் தன் ஆதார் அட்டை, பான்கார்டு அனைத்தையும் கொடுத்த அசோக், `தன் சொத்துகள் குறித்தும் விசாரித்துக்கொள்ளவும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அசோக் கூறுகையில், ``சிறு வயதிலிருந்தே நான் லஞ்சத்துக்கு எதிரானவன். லஞ்சம் வாங்கக் கூடாது என்ற மன உறுதியுடன் வாழ்ந்துவருகிறேன். என் உறுதியை குலைக்க சக ஊழியர்கள் முயல்கின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டு இந்தப் பணியில் சேர்ந்தேன். அப்போதும், என் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. என்னுடன் பணிபுரியும் பலரும் லஞ்சம் வாங்குகிறார்கள். என்னையும் வாங்குமாறு தூண்டுகின்றனர். நான் மறுப்பதால் என்னை எதற்கும் லாயக்கற்றவன் என்று திட்டுகின்றனர். இதனால்தான் என் அலுவலக அறையில், `நான் நேர்மையானவன்' என்கிற போர்டை வைத்தேன். இப்போது, வேறு வகையில் மிரட்டல் விடுக்கின்றனர். என் பாதுகாப்பு கருதி போலீஸில் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.

லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலைக்கு நாடு சென்றுகொண்டிருப்பதுதான் வேதனை!