Published:Updated:

`10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்ச்சி!’ -தெலங்கானா அரசின் அதிரடி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

``தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்த அரசின் விடாப்பிடியான முடிவுகள் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.”

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதற்கு முன்பே சில முறைகள் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதால் இந்த முறையும் தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் நிலவியது. இந்த நிலையில், ஜூன் 15-ம் தேதி தேர்வை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இதையடுத்து, தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை உயர்நீதிமன்றமானது இந்த மனுவை இன்று விசாரித்தது. விசாரணையில், ``கொரோனா தாக்கம் குறையும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு ஒத்திவைத்திருக்கிறது. இந்தச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத மாணவர்களை அரசு ஏன் நிர்பந்திக்கிறது. இதன்மூலம் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் என அனைவரையும் இக்கட்டுக்கு ஆளாக்க வேண்டுமா? லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்?” என தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மேலும், ``பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்துவது குறித்து மதியம் 2.30 மணிக்குள் முடிவெடுத்து அரசு தரப்பில் பதில் தெரிவிக்க வேண்டும். ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது” என்றும் கூறியது.

`ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாமா கூடாதா?!’ - ஒரே நாளில் முடிவை மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்

இதையடுத்து தமிழக அரசானது உயர்நீதிமன்றத்தில், ``தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தேர்வை நடத்த இதுவே சரியான நேரம்” என்று வாதாடியது. மேலும், ``தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு என்பது முக்கியமான தேர்வு. 11 மாநிலங்கள் ஏற்கெனவே இந்தத் தேர்வை நடத்தி முடித்துவிட்டன. தேர்வு மையங்களில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியது. தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்றமானது, பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என்பது குறித்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்த அரசின் விடாப்பிடியான முடிவுகள் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இன்டர்னல் தேர்வுகளின் அடிப்படையில் கிரேடுகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி விவாதித்த பின்னர் முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த முடிவை எடுத்துள்ளார். அம்மாநிலத்தில் சுமார் 5.34 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத இருந்ததாகக் கூறப்படுகிறது. தெலங்கானா மாநில அரசின் முடிவு தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது.

`ஜூன் 1-ல் பத்தாம் வகுப்புத் தேர்வு... மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?' - உளவியல் நிபுணர்
அடுத்த கட்டுரைக்கு