Published:Updated:

`காவல்நிலையம் முற்றுகை; ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்!’ - பரபரக்கும் தெலங்கானா #JusticeForPriyanka

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட ஹைதராபாத் பெண் மருத்துவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அம்மாநில ஆளுநர் தமிழிசை ஆறுதல் கூறினார்.

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை ( Twitter )

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நால்வரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பெண் மருத்துவர்
பெண் மருத்துவர்

கைது செய்யப்பட்ட நால்வரும் சஞ்சால்குடா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படும் முன், ஹைதராபாத்தின் ஷாத்நகர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது காவல்நிலையம் முன்பு கூடிய ஏராளமானோர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். அவர்கள் தடுக்கப்பட்டநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸார் மீது செருப்புகளை வீசினர். ஒருகட்டத்தில் நிலைமை விபரீதமாகவே போலீஸார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `அந்தப் பெண் மருத்துவருக்கு என்ன நேர்ந்ததோ, அதேபோன்ற தண்டனையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால், எங்களிடம் அவர்களை ஒப்படையுங்கள்’ என்று கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களிடம் உறுதியளித்த போலீஸார், பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

`நாடகம்.. கூட்டு பலாத்காரம்.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், கொலைசெய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த பெண் மருத்துவரின் புகைப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய தமிழிசை, அவரின் தாயார் மற்றும் தந்தைக்கு ஆறுதல் கூறினார். பெண் மருத்துவர் கொலையில் உரிய நீதி விரைவில் கிடைக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கையைத் தாம் எடுப்பதாக அவரின் பெற்றோருக்கு ஆளுநர் தமிழிசை உறுதியளித்தார்.