Published:Updated:

`எங்களுக்குக் காட்டிய நன்றியுணர்வு எங்கே?’ -வீட்டு உரிமையாளர்களால் கலங்கும் தெலங்கானா மருத்துவர்கள்

Doctors
Doctors

கொரோனா அச்சத்தால் வாடகை வீடுகளில் வசிக்கும் மருத்துவர்களைக் காலி செய்யுமாறு கூறியுள்ளனர் வீட்டின் உரிமையாளர்கள்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா கொடூரத்திலிருந்து மக்களைக் காக்கும் கடவுள்களாக மாறியுள்ளனர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள். தற்போது உலகம் இருக்கும் சூழலில் மருத்துவர்கள் `தேவதைகள், காக்கும் தெய்வங்கள், சூப்பர் ஹீரோக்கள்’ என்றே அழைக்கப்படுகிறார்கள். அந்த அளவுக்குச் சுகாதாரப் பணியாளர்களின் வேலைகள் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் நேரம் காலம் பார்க்காமல் இரவுபகலாக வேலை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பலர் தங்கள் குடும்பங்கள், அன்புக்குரியவர்களை விடுத்து மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளைக் காத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும், எப்போதும் வேண்டுமானாலும் தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை அறிந்தே அவர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா அச்சத்தால் வாடகை வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை வீட்டு ஓனர்கள் வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்லும் அவலம் நடைபெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் என்ற மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், ``மக்கள் எங்களின் மருத்துவ கோட் மற்றும் ஸ்டெதெஸ்கோப் ஆகியவற்றுக்கு மட்டுமே அங்கீகாரம், மரியாதை வழங்குகிறார்கள். மருத்துவர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருந்தால் தங்களுக்கும் வைரஸ் வந்துவிடும் என்று நம்புவதால் வாடகை வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
மாதிரி புகைப்படம்

ஒரு உரிமையாளர், எங்களை அழுக்கானவர்கள் என்று கூறிய நிகழ்வும் நடந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி எங்களை வெளியேறும்படி கூறுகிறார்கள் இதனால் பல மருத்துவர்கள் தற்போது செல்வதற்கு இடம் இல்லாமல் தெருக்களில் நிற்கிறார்கள். வீட்டு ஓனர்களால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

எங்கள் மருத்துவமனையில் இருக்கும் விடுதிகளும் தற்போது தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்றப்படுகின்றன. நாங்கள் எந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் இல்லாமல் வேலை செய்து வருகிறோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் எங்களுக்குக் காட்டிய நன்றியுணர்வு எங்கே? இப்படி நடந்துகொள்ளும் மக்களுக்காகத்தான் நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறோம்” என வேதனையாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு